தமிழ்நாடு

போலி நகைகள் ரூ.1.5 கோடிக்கு அடகு வைப்பு : வங்கி நகை மதிப்பீட்டாளரே மோசடி

போலி நகைகள் ரூ.1.5 கோடிக்கு அடகு வைப்பு : வங்கி நகை மதிப்பீட்டாளரே மோசடி

webteam

விழுப்புரத்தில் போலி நகைகளை வைத்து ஒன்றரை கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்த வங்கி நகை மதிப்பீட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த திருவம்பட்டு பஞ்சாப் நேஷனல் வங்கியில், புதுச்சேரி மாநிலம் முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் கடந்த 7 வருடங்களாக நகைப் மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். இதனால் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல அறிமுகமானவர் ஜெகநாதன். இதனை பயன்படுத்தி கடந்த 2 வருடங்களாக போலி நகைகளை வாடிக்கையாளர்களிடம் கொடுத்து, அவர்களின் வங்கி கணக்கில் வைத்து தனக்கு பண உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

நம்பிக்கையானவர் என்பதால் வாடிக்கையாளர்களும் போலி நகை என தெரியாமல் தங்கள் வங்கி கணக்கில் நகை வைத்து உதவி செய்துள்ளனர். அதன் மூலம் போலி நகைகளை வங்கியில் வைத்து சுமார் 1.5 கோடி பணத்தை கையாடல் செய்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ஜெகநாதன் நடத்தையில் சந்தேகம் எழவே வங்கி மேலாளர் நகைகளை ஆய்வு செய்தபோது, சுமார் 1.5 கோடி அளவிற்க்கு போலி நகைகளை வைத்து பணம் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து வங்கி மேலாளர் செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதைத்தொடர்ந்து வங்கி நகை மதிப்பீட்டாளர் ஜெகநாதனை கைது செய்த செஞ்சி காவல்துறையினர், அவரிடம் 1.5 கோடி பணம் கையாடல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் திருவம்பட்டு கிளை வங்கி லாக்கரில் உள்ள நகைகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக ஆவணங்களையும் சென்னை மண்டல அலுவலர் தலைமையிலான குழு ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். வங்கி நகை மதிப்பீட்டாளரே மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.