தமிழ்நாடு

அனிதா குடும்பத்தின் துயரத்துடன் கைகோர்த்த விஜய்க்கு விவேக் பாராட்டு

அனிதா குடும்பத்தின் துயரத்துடன் கைகோர்த்த விஜய்க்கு விவேக் பாராட்டு

webteam

நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாணவி அனிதா குடும்பத்தினரை நடிகர் விஜய் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து சமூக வலைதளங்களில் விஜய்க்கு பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில் நடிகர் விவேக், ட்விட்டரில் விஜய்க்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வு காரணமாக கலைந்து போன டாக்டர் கனவால் கடந்த 1 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

இந்நிலையில் நடிகர் விஜய் நேற்று காலை குழுமூரில் உள்ள மாணவி அனிதா வீட்டிற்கு சென்று அனிதாவின் தந்தை சண்முகம் மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது எந்த உதவிகள் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளதாக உறுதி கொடுத்தார். இதனையடுத்து விஜய்க்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்தன. மேலும் சமூக வலைதளங்களில் ஜல்லிக்கட்டுப் போராட்டம், பண மதிப்பிழப்பு தொடர்பான பேட்டி, அனிதா குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் என மக்களின் உணர்வுகளுக்கும் போராட்டங்களுக்கும் விஜய் அளித்த ஆதரவைக் குறிக்கும் விதமாக மீம் ஒன்று வைரலானது.

இதையடுத்து, நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் மக்களின் உணர்வுகளுக்கும் போராட்டங்களுக்கும் ஆதரவு அளித்த அந்த மீம்மை சுட்டிக்காட்டி, ‘அன்பு விஜய்! உங்கள் செயல் என் உள்ளத்தை உணர்ச்சிவசப்படச் செய்கிறது. உங்கள் அக்கறைக்கும், கருணைக்கும் வாழ்த்துகள்’ என பதிவிட்டுள்ளார்.