தமிழ்நாடு

'திறமை இருந்தும் பணம் இல்லையே'- உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளி மாணவி

'திறமை இருந்தும் பணம் இல்லையே'- உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளி மாணவி

Sinekadhara

தஞ்சாவூர் அருகே பார்வையற்ற குடும்பத்தைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி மாணவி, இசைக்கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வருகிறார். திறமை இருந்தும் படிப்பதற்கு வாய்ப்பின்றி தவித்து வருகிறார் அவர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த புதுவிடுதி கிராமத்தைச் சேர்ந்த சந்தியா என்ற மாணவி, பிறவியிலேயே பார்வை குறைபாடு உடையவர். சந்தியா மட்டுமின்றி அவரது தாய், சகோதரர்கள் என குடும்பமே பார்வையற்றவர்கள். தற்போது 12-ம் வகுப்பு படித்து வரும் இவர், இசை மீது தீரா காதல் கொண்டுள்ளார். இசைக்கல்லூரியில் பயின்று, பாடகியாக வேண்டும் என்பதை இலக்காக கொண்டுள்ள சந்தியா அதற்கான வாய்ப்பின்றியும், நிதியுதவி கிடைக்காமலும் தவித்து வருகிறார்.

லாரி ஓட்டி வந்த சந்தியாவின் தந்தை, உடல் நலக்குறைவால் படுக்கையில் விழுந்த பிறகு அன்றாட உணவிற்கே வழியின்றி தவித்து வருகின்றனர். பாடும் திறன் பெற்ற மாணவிக்கு, உரிய வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவரின் குடும்ப நிலையும் உயரும். இசை கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு தமிழ்நாடு அரசோ, தன்னார்வலர்களோ உதவ வேண்டும் என்பதே அவரின் பிரதான கோரிக்கையாகும். அது நிறைவேறும் பட்சத்தில் குடிசையில் இருக்கும் குயிலின் குரல், நாளை பார் எங்கும் ஒலிக்கலாம்.