தமிழ்நாடு

விவசாயிகளுக்காக கலை நிகழ்ச்சி: விஷால் தகவல்

விவசாயிகளுக்காக கலை நிகழ்ச்சி: விஷால் தகவல்

webteam

விவசாயிகளுக்காக கலை நிகழ்ச்சிகள் நடத்தி அவர்களுக்கு உதவ உள்ளதாக நடிகர் விஷால் கூறினார்.

டெல்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 2 வாரங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். வறட்சி நிவாரணத் தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை டெல்லியில் நேற்று நேரில் சந்தித்த நடிகர் விஷால், பிரகாஷ் ராஜ், பாண்டிராஜ் ஆகியோர் அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். விவசாயிகள் பிரச்னை தொடர்பாக இன்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியை நடிகர் விஷால் குழுவினர் சந்தித்து பேசினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், பொதுமக்களுக்கு தாழ்மையான வேண்டுகோள் ஒன்றை வைத்தார். சினிமா பார்ப்பதற்காக ஒவ்வொருவரும் பணம் செலவழித்து தியேட்டர் செல்கிறோம். அவ்வாறு செலவழிக்கும் பணத்தில் சிறிது பணத்தை சேர்த்து நாம் விவசாயிகளுக்கு கொடுத்தால் அவர்களின் பிரச்னை ஓரளவிற்கு தீரும். அது எவ்வாறு செயல்பாட்டிற்கு வரும் என்பது தெரியவில்லை. ஆனால் நாம் ஒவ்வொருவரும் இதனை செயல்படுத்த முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் சென்னை வந்தபின், விவசாயிகளுக்காக கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை நடத்தி ஓரளவிற்கு அவர்களுக்கு உதவ உள்ளதாகவும் கூறினார்.