நீட் தேர்வுக்கு எங்கள் கிராமப்புற மாணவ, மாணவிகளை ஒவ்வொருவராக இழந்துவருகிறோம் என விஷால் வேதனை தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் சேத்துப்பட்டை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் எலி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் பத்தாம் வகுப்பில் 495 மதிப்பெண்களும், 12-ஆம் வகுப்பு தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்றவர். இந்நிலையில் நீட் தேர்வின் தோல்வியால் பிரதீபா தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்களும் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அத்துடன் நீட் தேர்வுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள விஷால், “நீட் தேர்வுக்கு எங்கள் கிராமப்புற மாணவ, மாணவிகளை ஒவ்வொருவராக இழந்து வருகிறோம். போராடி உயிரை மாய்த்துக்கொண்டாள் அனிதா. தேர்வு எழுதியும் தோற்றதால் உயிரை தந்து இருக்கிறார் பிரதீபா. இந்தச் செய்தி கேள்விப்பட்டதில் இருந்தே வேதனையாக இருக்கிறது. நீட் எழுதும் மாணவர்களுக்கு எப்போதும் கைகொடுக்க தயாராக இருக்கிறேன். நீட் நிரந்தரம் என்றால் நீட் எழுத மாணவர்களுக்கு போதுமான வசதிகளையும், சிறப்பு வகுப்புகளையும், மன தைரியத்தையும் கல்வித்துறை வழங்கிட வேண்டும். இது அரசின் கடமை. இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஒரு ஏழை மாணவர் கூட டாக்டர் படிப்பை நினைத்து பார்க்க முடியாது என்ற நிலை உருவாகிவிடும்” என தெரிவித்துள்ளார்.