தமிழ்நாடு

‘பிரியாணி’ யுவராஜ் நீதிமன்றத்தில் சரண்

‘பிரியாணி’ யுவராஜ் நீதிமன்றத்தில் சரண்

webteam

விருகம்பாக்கத்தில் பிரியாணிக் கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் தேடப்பட்டு வந்த திமுகவைச் சேர்ந்த யுவராஜ் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் இரவு நேரத்தில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஆர்.ஆர். அன்பு பிரியாணிக் கடைக்கு சிலர் உணவு உண்ண வந்தனர். அப்போது பிரியாணிக் கேட்டு அவர்கள் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேரமாகி விட்டதால் பிரியாணி இல்லையென கடைக்காரர்கள் கூறவே, வந்திருந்தவர்கள் கடை ஊழியர்களை சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து கடையின் மேலாளர் அருண் ஜஸ்டின் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். 

விசாரணையில் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த யுவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் பிரியாணிக் கடை ஊழியர்களை தாக்கியது தெரியவந்தது. யுவராஜ் திமுகவைச் சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. மேலும் யுவராஜ் பாக்ஸர் போல் பிரியாணிக் கடைக்காரரை எம்பி எம்பித் தாங்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது. அதனை தொடர்ந்து யுவராஜ் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். பிறகு திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் இந்தக் கடைக்கு சென்று நடந்தவற்றை கேட்டறிந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் யுவராஜின் நண்பர்கள் ராம், கார்த்திக், கிஷோர், ருத்ரகுமார், கார்த்திக் மற்றும் கல்லூரி மாணவர் சுரேஷ் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த யுவராஜ், திவாகர் மற்றும் சதீஷ் ஆகியோரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் தேடப்பட்டுவந்த யுவராஜ் இன்று மதியம் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.