தமிழ்நாடு

விருதுநகரில் சுழற்றியடித்த சூறாவளி: சுக்குநூறான மின்கம்பங்கள்!

விருதுநகரில் சுழற்றியடித்த சூறாவளி: சுக்குநூறான மின்கம்பங்கள்!

kaleelrahman

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே வீசிய சூறாவளி காற்றால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் மின் கம்பங்கள் உடைந்து சேதமானது.

ராஜபாளையம் அருகே உள்ள நல்லமநாயக்கர் பட்டியை சேர்ந்த பட்டதாரி ராம்குமார். கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் தனது தந்தை தவறியதால் தனது குடும்ப சொத்தான சுமார் 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். தனது நிலத்தில் பயறு வகைகள் மற்றும் காய்கறிகள் பயிரிட்டுள்ளார்.

மீதம் உள்ள இடத்தில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் வெள்ளாடு வளர்ப்புக்காக ரூ.2.50 லட்சம் மதிப்பில் தகர கொட்டகை அமைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை திடீரென சூறாவளி காற்று வீசி உள்ளது. இதில் தகரக் கொட்டகை பிடிமானம் இன்றி, அமைக்கப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 20 அடி தூரத்திற்கு அப்பால் தலைகுப்புற கவிழ்ந்து சேதமாகி உள்ளது.

மேலும் இந்த இடத்திற்கு அருகே தனியாக வசித்து வந்த கெங்கம்மாள் என்பவரது வீட்டின் மேற்கூரை மற்றும் மின் இணைப்பு பெட்டியும் சேதமடைந்தது. அதேபோல சங்கரலிங்கபுரம் கிராமத்தில் இருந்த 3 மின் கம்பங்களும் நேற்று வீசிய சூறாவளி காற்றால் சேதமடைந்துள்ளது. சேதமடைந்த பொருட்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.