வடமாநில இளைஞர் ஜத்தேஷ்குமார்  file image
தமிழ்நாடு

65வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வடமாநில இளைஞர்; விரட்டிபிடித்து பாடம் புகட்டிய மக்கள்!

PT WEB

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம், செட்டியார்பட்டி, இளந்திரை கொண்டான், அம்மையப்பபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

வடமாநில இளைஞர் ஜத்தேஷ்குமார்

நேற்று இரவு அம்மையப்பபுரத்தில் இயங்கி வரும் அறிவுமணி என்பவருக்குச் சொந்தமான ஆலையில் பீகாரை சேர்ந்த ஜத்தேஷ்குமார் என்ற [22 வயது] இளைஞர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மாடுகளுக்குத் தீவனம் சேகரித்துக் கொண்டிருந்த 65 வயது மூதாட்டியைத் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்த போது அந்த இளைஞன் தப்பியோடியுள்ளார். அங்கிருந்த பொது மக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

இந்தநிலையில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, அந்த பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் செட்டியார்பட்டியில் இருந்து இளந்திரை கொண்டான் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திடீர் போராட்டத்தால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ய முயன்றுள்ளனர். அங்கிருந்த பொதுமக்கள் போலீசாரிடம், தங்கள் பகுதியில் பெண்கள், இளம் பெண்கள், மாணவிகள் அதிகம் இருப்பதால் பாதுகாப்பு கருதி ஆலைகளில் பணிபுரியும் வட மாநில தெரிலாளர்களை வெளியேற்ற வேண்டும் எனக் கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் நீண்ட நேரமாகப் போராடி அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து போராட்டத்தை கை விட்ட பொதுமக்கள் கும்பலாகச் சென்று அனைத்து ஆலை உரிமையாளர்களிடமும் "வட மாநில தொழிலாளர்களை வெளியேற்ற வேண்டும் எனவும் , நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுப்போம் என எச்சரிக்கை விடுத்ததுள்ளனர்.

இந்த திடீர் சாலைமறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டது.