தமிழ்நாடு

எச்.ஐ.வி ரத்தத்தால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு கூட்டு மருத்து சிகிச்சை

எச்.ஐ.வி ரத்தத்தால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு கூட்டு மருத்து சிகிச்சை

webteam

விருதுநகரில் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி தொற்றுடன் கூடிய ரத்தம் செலுத்தப்பட்ட பாதிப்பிற்கு கூட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ஒருவர் வெளிநாடு செல்வதற்காக உடல் பரிசோதனை செய்தபோது ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. விசாரணையில் 2 வாரங்களுக்கு முன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அவர் ரத்த தானம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது ரத்தம் யாருக்கு செலுத்தப்பட்டது என்ற பட்டியலை எடுத்து பார்த்த போது, சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அப்பெண்ணின் ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தபோது அவர் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. 

முதல் கட்ட விசாரணையில் சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஒப்பந்த ஊழியர் செய்த தவறினால் தவறு நிகழ்ந்ததாக விருதுநகர் மாவட்ட மருத்துவ நலப்பணி இணை இயக்குநர் மனோகரன் கூறியுள்ளார். கடந்த 30ம் தேதி வெளிநாடு செல்ல இருந்த நபர், ரத்த வங்கியில் சோதனை செய்தபோது உடல்நிலை சீராக இருப்பதாக அந்த ஊழியர் தெரிவித்ததால் தவறு நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால் மருத்துவமனை தொழில்நுட்ப வல்லுநரான ஒப்பந்த ஊழியர் வளர்மதி பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். மேலும் 2 ஒப்பந்த ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

ரத்த பரிசோதனை செய்யப்பட்ட உபகரணங்கள் சோதனை செய்யப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ள மனோகரன், இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்படுவதாக கூறியுள்ளார். தற்போது எச்ஐவி பாதிப்பு ஏற்பட்ட கர்ப்பிணிக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எய்ட்ஸ் பாதிப்பு இல்லாமல் குழந்தையை பெற்றெடுப்பதற்காக கூட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு மாநில எய்ஸ்ட் கட்டுப்பாட்டு திட்ட இயக்குநர் செந்தில்ராஜ் கூறியுள்ளார்.