செய்தியாளர்: A.மணிகண்டன்
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனை ஆடி 18, பெருக்கு தினத்தில் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களில் இருந்தும் பட்டாசு மொத்த வியாபாரிகள் ஆர்டர் கொடுக்கப்பட்ட பட்டாசுகளை தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டன.
சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசுகளை வாங்க வெளியூர்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்த மக்கள் ஆர்வமாக விதவிதமான பட்டாசுகளை வாங்கிச் சென்றனர்.
இந்நிலையில், தற்போது வரை சுமார் 90 சதவீத பட்டாசுகள் முற்றிலுமாக விற்பனையாகி விட்டதாக பட்டாசு விற்பனையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடந்தாண்டு தீபாவளி பண்டிகையின் போது, 6000 கோடி ரூபாய் அளவிற்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு 6000 ரூபாய் கோடிக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
வடமாநிலங்களில் தீபாவளிக்கு அடுத்த நாட்களில் கொண்டாடப்பட இருப்பதால் பட்டாசுகள் விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து பேசிய விருதுநகர் மாவட்ட பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சோனி கணேசன், "60 சதவீதம் பேரியம் நைட்ரேட் மற்றும் 20 சதவீதம் சரவெடி உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த உத்தரவைத் தொடர்ந்து 20 சதவீத பசுமை பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு தீபாவளிக்கு 6000 கோடி ரூபாய் அளவிற்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு சுமார் 6000 கோடிக்கும் கூடுதலாக பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.