குழந்தையுடன் தவறி விழுந்த பெண்கள் pt desk
தமிழ்நாடு

விருதுநகர்: நெடுஞ்சாலைத்துறை தோண்டிய பள்ளம்... கைக்குழந்தையோடு தவறி விழுந்த பெண்கள்! நடவடிக்கை என்ன?

சாத்தூரில் நெடுஞ்சாலைத் துறையால் தோண்டப்பட்ட பள்ளத்தில் கைக் குழந்தையுடன் சென்ற பெண் மற்றும் ஒரு முதியவர் பள்ளத்தில் தவறி விழும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

webteam

செய்தியாளர்: A. மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக நெடுஞ்சாலைத் துறையினரால் சாலை அகலப்படுத்துதல், பேவர் பிளாக் பதித்தல் போன்ற பணிகள் பல கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இதனால் சாத்தூர் நகர் பகுதிகளில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே சாத்தூர் நகர் பகுதியில் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சாலையின் ஓரங்களில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளன.

குழந்தையுடன் தவறி விழுந்த பெண்கள்

நேற்றும் சாத்தூர் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதில் அங்கிருந்த பள்ளங்கள் வெளியே தெரியாத அளவுக்கு அவற்றில் தண்ணீர் நிரம்பியது.

அப்படி மதுரை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான கடை அருகே இருந்த பள்ளமும் மழைநீர் நிரம்பி காணப்பட்டது. இதையறியாது அப்பகுதியில் குடையை பிடித்தபடி 3 பெண்கள் கைக்குழந்தையுடன் சாலையை கடக்க முயன்றனர். அப்போது பள்ளத்தில் தேங்கியிருந்த மழை நீரில் கைக்குழந்தையுடன் இரு பெண்கள் தவறி விழுந்துள்ளனர்.

இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவரும் அதே பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். இதன் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து உடனடியாக அந்த பள்ளத்தை மூடி கான்கிரீட் போடப்பட்டுள்ளது. பள்ளம் தோண்டப்பட்டுள்ள பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை முன்கூட்டியே செய்திருந்தால் இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெற்று வந்திருக்காது என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.