தமிழ்நாடு

விருதுநகர்: ஊரடங்கால் வன விலங்குகளுடன் பசி பட்டினியால் பரிதவிக்கும் சர்க்கஸ் கலைஞர்கள்

விருதுநகர்: ஊரடங்கால் வன விலங்குகளுடன் பசி பட்டினியால் பரிதவிக்கும் சர்க்கஸ் கலைஞர்கள்

kaleelrahman

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஊரடங்கால் சர்க்கஸ் தொழிலாளர்கள், வன விலங்குகளுடன் பசி பட்டினியால் தவித்து வருகின்றனர். அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேபாள நாட்டை பூர்விகமாக கொண்ட சர்க்கஸ் கலைஞர்கள் 3 தலைமுறைக்கு முன்பாக அங்கிருந்து புலம் பெயர்ந்து தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கு வந்தனர். அங்கு வசித்துவரும் கதிரேசன் என்பவர் தலைமையில் இருபது நபர்கள் கொண்ட குழுவினர் தமிழ்நாடு முழுவதும் ஊர் ஊராக, கிராமம் கிராமமாகச் சென்று சர்க்கஸ் நடத்தினர்.

இந்நிலையில், இந்த சர்க்கஸ் குழுவினர் சிவகாசி அருகே நாரணாபுரம் கிராமத்தில் முகாமிட்டு சர்க்கஸ் தொழிலை நடத்தலாம் என்ற நம்பிக்கையில் வந்துள்ளனர். ஆனால், கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் சர்க்கஸ் கூடாரமே அமைக்க முடியாமல் வந்த இடத்தில் தொழில் நடத்த வழியின்றி வருமானமும் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர் .

இவர்களை கண்டு பரிதாபப்பட்ட நாரணாபுரம் கிராம மக்கள் தங்களால் இயன்ற பால் மற்றும் உணவு பொருட்களை கொடுத்து சர்க்கஸ் கலைஞர்களின் பசியை போக்கி வருகின்றனர். இதையடுத்து இவர்கள் பராமரித்து வரும் ஒட்டகம், குதிரை போன்ற ஜீவன்களுக்கு தீவனங்கள் வாங்க வழியின்றி, நாய் குரங்கு போன்ற மிருகங்களுக்கும் உணவு வழங்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

தொழில் செய்து பிழைப்பு தேடி வந்த இடத்தில் சர்க்கஸ் நடத்த முடியாமலும் சொந்த ஊருக்கு திரும்ப இயலாமலும் தவித்து வரும் சர்க்கஸ் கலைஞர்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. ஊரடங்கு காலமான இந்த நேரத்தில் பயிற்சி மேற்கொண்டு வரும் இவர்கள் இந்த கொரோனா காலம் எப்போது முடிவடையும் தங்களுக்கு எப்போது விடிவு காலம் வரும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

எஸ்.செந்தில்குமார்