தமிழ்நாடு

‘ஸ்டாப்ல அரசுப்பேருந்து நிற்பதில்லை’- தனியார் பேருந்தில் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்கள்

webteam

ராஜபாளைய நிறுத்தத்தில் நிற்காத அரசுப் பேருந்துகளால் தனியார் பேருந்துகளின் படியில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து சத்திரப்பட்டி செல்லும் சாலையில் உள்ள அழகை நகர், பிஎஸ்கே நகர், பாரதி நகர், பொன்னகரம் மற்றும் கலங்காபேரி சாலையில் 10க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி நலையங்களில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இவர்கள் பள்ளிக்குச் செல்லும் நேரத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள், பேருந்து நிறுத்தத்தில் நிற்பதில்லை என புகார் எழுந்துள்ளது. எனவே பேருந்துகளை தவற விடுவது வழக்கமாகி விட்டதாக மாணவர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் சில நேரங்களில் சரியான நேரத்திற்கு அரசுப் பேருந்துகள் வருவதில்லை எனவும் குற்றம்சாட்டினர்.

எனவே பள்ளிக்கு செல்வதில் கால தாமதத்தை தவிர்ப்பதற்காக தனியார் பேருந்துகளில் நெரிசலில் மிகுந்த சிரமத்திற்கு இடையே மாணவிகள் சென்று வருகின்றனர். மாணவர்களுக்கு பேருந்து உள் பகுதியில் இடம் கிடைக்காத காரணத்தால், படிகளில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பள்ளிக்கு செல்கின்றனர்.

பாதாள சாக்கடை திட்டம் மற்றும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக சாலையின் பெரும்பாலான இடங்கள் தோண்டப்பட்டுள்ளதால், பல இடங்கள் மேடு பள்ளமாக உள்ளது. இந்த வழியாக மாணவர்கள் படியில் தொங்கிபடி செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சரியான நேரத்தில் பேருந்துகளை இயக்கவும், இயக்கப்படும் பேருந்துகள் சரியான நிறுத்தத்தில் நிறுத்தி மாணவர்களை அழைத்துச் செல்வதை போக்குவரத்து துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.