போலீஸை விரட்டிய இளைஞர்கள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

சென்னையில் கஞ்சா போதையில் தகராறு: தடுக்க வந்த போலீஸை ஓட ஓட விரட்டிய இளைஞர்கள்!

கஞ்சா போதையில் போலீஸ் கான்ஸ்டபிளை அச்சுறுத்தும் வகையில் போதை ஆசாமிகள் செயல்படும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

PT WEB

சென்னை காட்டுப்பாக்கம் ஜெ.ஜெ நகரைச் சேர்ந்தவர் திருமாவளவன். இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்குச் சென்று வந்தபோது அவரைச் சாலையில் வழிமறித்த கஞ்சா போதையில் இருந்த மூன்று பேர், பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். தன்னிடம் பணம் இல்லை என திருமாவளவன் கூறவே, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாகத் தாக்கியதோடு, சிறிய கத்தியால் கீறியும் உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த திருமாவளவன், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

போலீஸை விரட்டிய இளைஞர்கள்

உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸ் கான்ஸ்டபிள் சரவணன் பணம் கேட்டு தாக்குதலில் ஈடுபட்ட நபர்களைப் பிடிக்க முயன்றுள்ளார். அப்போது கஞ்சா போதையில் இருந்த அம்மூவரில் ஒருவர், சிறிய கத்தியால் தன்னைக் கிழித்துக்கொண்டதோடு, காவலரை நோக்கி அச்சுறுத்தும் வகையில் கையில் கத்தியுடன் துரத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கான்ஸ்டபிள் சரவணன் பயந்து ஓட்டம் பிடித்துள்ளார். பின்னர், பூவிருந்தவல்லி காவல் துறையினர் சிறிது நேரத்தில் அம்மூவரையும் பிடித்து விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

இதில் காவலர் சரவணனை அவர்கள் அச்சுறுத்தியதன் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.