செய்தியாளர்: R.ராஜிவ்
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினர் மனோஜ் குமார் ஜா என்பவர் நாடு முழுவதும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களின் மீதான வன்முறை அதிகரித்துள்ளதா? அது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்தும் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் இணை அமைச்சர் ராம்தாஸ் அதாவலே, நாடு முழுவதும் மாநில வாரியாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை மாநிலங்களவையில் வழங்கியுள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் 2020ல் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான குற்றங்கள் குறித்து 1,274 வழக்குகள் பதிவான நிலையில், 2021ல் அதன் எண்ணிக்கை 1,377 ஆகவும், 2022ல் 1,767 ஆகவும் அதிகரித்துள்ளது.
இதே போல் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் என்ற பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2020ல் 23 ஆக இருந்த நிலையில், 2021ல் 39 ஆகவும், 2022ல் 67 ஆகவும் அதிகரித்துள்ளது என்பது மத்திய அரசு வழங்கியுள்ள புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.