தமிழ்நாடு

இரவு நேர ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை - காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

இரவு நேர ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை - காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

kaleelrahman

இரவு நேர ஊரடங்கை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப் பதியப்படும் என காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சென்னையில் காணாமல் போன மற்றும் திருடு போன செல்போன்களை கண்டறிந்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்தது. சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உரியவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்து விட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், "இன்றில் இருந்து இரவு ஊரடங்கு நடைமுறைக்கு வர உள்ளது. எதற்கெல்லாம் அனுமதி உண்டு, எதற்கெல்லாம் அனுமதி இல்லை என்பது தொடர்பாக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனை காவல்துறையினர் செயல்படுத்த உள்ளனர். இரவு முழு ஊரடங்கு பாதுகாப்பு கண்காணிப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்.

சென்னையில் 200 இடங்களில் காவல்துறையினர் வாகன சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முக்கிய சாலைகளில் காவல்துறை வாகன சோதனை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளோம். மேம்பாலங்கள் மூடப்படும்.

இன்று இரவு 10 மணிக்கு இரவு ஊரடங்கு தொடங்கி விடும். 10 மணிக்கு வாகன சோதனைகளை தொடங்கி விடுவோம். இரவு முழு ஊரடங்கை மீறி வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளோம். உத்தரவை மீறி வருபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யப்படும்.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அன்று திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் திருமண அழைப்பிதழை வைத்திருந்தால் போதும். காவல்துறையினரிடம் காட்டினால் அனுமதிக்கப்படுவார்கள். இரவு ரோந்து தீவிரப்படுத்த உள்ளோம். ஊரடங்கு சமயத்தில் ரயில் நிலையங்கள், விமான நிலையம் செல்பவர்கள் பயண டிக்கெட் காட்டினாலே போதும். காவல்துறை அனுமதிப்பார்கள். சென்னை மக்கள் இரவு முழு ஊரடங்கிற்கும் முழு ஊரடங்கிற்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பத்திரிகைகள், ஊடகங்களுக்கு எந்தவித கட்டுபாடுகளும் இல்லை" என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கூறியுள்ளார்.