விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, விநாயகர் சிலைகளை வைப்பதற்கான விண்ணப்பங்களை ஒற்றை சாளர முறையில் பரிசீலிப்பதாக
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.
விநாயகர் சிலைகள் வைக்க பல்வேறு அனுமதிகளைப் பெற வேண்டுமென தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி அரசாணை
பிறப்பித்தது. குறுகிய காலத்தில் பல்வேறு துறைகளின் அனுமதி பெறுவது சாத்தியமில்லை என்றும், அந்த அரசாணையை ரத்து
செய்யவும் கோரியும், இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணையில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ஒற்றை சாளர முறையில்
விண்ணப்பங்களை பரிசீலிக்க தயாராக இருப்பதாக கூறினார். அவ்வாறு வரும் விண்ணப்பங்களை மூன்று நாட்களில் பரிசீலித்து
முடிவெடுப்பதாகவும் தெரிவித்தார்.
மாநகரங்களை பொறுத்தவரை காவல் துணை ஆணையரையும், மாவட்டங்களை பொறுத்தவரை துணை கண்காணிப்பாளரையும் அணுகி
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமெனத் தெரிவித்தார். அப்போது பேசிய நீதிபதி ஆர்.மகாதேவன், சிலை வைக்கும் இடங்களுக்குத்
தேவையான மின்சாரத்தை அருகில் இருக்கும் வீடுகள், வணிக நிறுவனங்கள் ஒப்புதலோடு எடுப்பதில் ஆட்சேபணை இல்லை என்றார்.
ஆனால் மின்தட கம்பிகளில் இருந்து திருட்டு மின்சாரம் எடுப்பதை அனுமதிக்க முடியாது என்றும் கூறினார். இதை மீறுவோர் மீது
கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறிய நீதிபதி மகாதேவன், வழக்கு மீதான உத்தரவை நாளை (இன்று) பிறப்பிப்பதாகக்
தெரிவித்தார்.