இந்து மக்களுக்கு குளிர்பானங்களை வழங்கிய இஸ்லாமியர்கள் pt desk
தமிழ்நாடு

காயல்பட்டினம்: விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் - இந்து மக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கிய இஸ்லாமியர்கள்

காயல்பட்டினத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் வந்தவர்களுக்கு இஸ்லாமியர்கள் குளிர்பானங்களை வழங்கினர்.

webteam

செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்

நேற்று விநாயகர் சதுர்த்தி விழா தமிழ்நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அந்தந்த பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதையடுத்து விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அனைத்து விநாயகர் சிலைகளுக்கும் சிறப்பு பூஜைகள் நேற்றும் இன்றும் நடந்தன.

இந்து மக்களுக்கு குளிர்பானங்களை வழங்கிய இஸ்லாமியர்கள்

அப்படி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குரும்பூர், நாசரேத், வாழவல்லான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை திருச்செந்தூர் கடற்கரையில் கரைப்பதற்காக ஊர்வலமாக மக்கள் இன்று எடுத்துச் சென்றனர்.

அப்போது காயல்பட்டிணம் வழியாக அவர்கள் ஊர்வலம் சென்ற போது, விநாயகர் சிலைகளுடன் வந்த இந்து மக்களுக்கு காயல்பட்டினம் காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் சார்பாக அதன் தலைவர் ஜெய்னுலாப்தீன், அமமுக நகர செயலாளர் யாசீன், மாணவர் இயக்கம் நிறுவனர் ஆசிரியர் மீரா சாகிப் ஆகியோர் குளிர்பானங்களை வழங்கினர்.

இந்து மக்களுக்கு குளிர்பானங்களை வழங்கிய இஸ்லாமியர்கள்

இந்த ஊர்வலத்தை இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் வீட்டின் வாசலில் நின்று கண்டு ரசித்தனர். அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதற்கு சாட்சியாக இருந்த இந்த நிகழ்வு காயல்பட்டினம் மட்டுமல்லாமல் திருச்செந்தூர் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் ஏராளமான போலீசார் மற்றும் அதிரடி படையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்தனர்.