விநாயகர் சிலை கரைப்பு முகநூல்
தமிழ்நாடு

விநாயகர் சிலை கரைப்பு விவகாரம் | தமிழக அரசின் கருத்துக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம்!

PT WEB

விநாயகர் சிலை கரைப்புக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை தமிழக அரசு ஏற்க மறுத்துள்ள நிலையில், அதற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி நீர்நிலைகளை மாசுப்படுத்தாத, ரசாயனம் கலக்காத சிலைகளை மட்டுமே கரைக்க அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவு உள்ள நிலையில், தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் சில வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தது.

இதற்கு பதிலளித்துள்ள தமிழக அரசு சிலைகளை கரைக்க கட்டணம் நிர்ணயிப்பது மற்றும் அபராதம் விதிப்பது வழிபாட்டு உரிமை மற்றும் மக்களின் உணர்வு சம்பந்தப்பட்டது என்பதால் சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை என தெரிவித்துள்ளது. இதனை குறிப்பிட்டுள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் நிர்ணயிக்க முடியாது என தமிழக அரசு கூறியுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளது.

சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிப்பது வழிபாட்டு உரிமை கிடையாது என கூறியுள்ள பூவுலகின் நண்பர்கள், மாசுபடுத்துவோரே அதற்கான இழப்பீட்டை அளிக்க வேண்டும் என பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. விநாயகர் சிலை தயாரிப்பில் ரசாயனங்கள் கலப்பது தொடர்ந்து வருவதாக கூறியுள்ள அந்த அமைப்பு, இதுபோன்ற ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.