தமிழ்நாடு

‘பள்ளிகளில் ஆதாரை கட்டாயப்படுத்துவது சட்டவிரோதமானது’ - ரவிக்குமார் 

rajakannan

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் கட்டாயப்படுத்தப்படுவதற்கு விழுப்புரம் எம்பி ரவிக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆதார் இருந்தால்தான் அட்மிஷன் வழங்கப்படும் என சில பள்ளிகள் கெடுபிடி காட்டின. இதற்கு பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, மாணவர் சேர்க்கையில் ஆதார் கட்டாயம் என்ற முறை தளர்த்தப்பட்டது. இத்தகைய நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் கட்டாயப்படுத்தப்படுவதற்கு ரவிக்குமார் எம்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மாநில திட்ட ஆணைய இயக்குநருக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்கள் மற்றும் மானியங்களை பெறுவதற்காகவே ஆதார் முறை கொண்டு வரப்பட்டது. மற்ற விவகாரங்களுக்கு ஆதாரை கேட்பது ஆதார் சட்டம் 2016-படி சட்ட விரோதமானது. உச்சநீதிமன்ற நீதிபதிகளே இதுதொடர்பாக விளக்கத்தை தெளிபடுத்தி இருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.