செய்தியாளார்: காமராஜ்
வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. விழுப்புரம் நகர பகுதியான தாமரை குளம், பாண்டியன் நகர் கட்டபொம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாய்கால்களை தூர் வாறும் பணியை நகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளை வனத்துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் பழனி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கட்டபொம்மன் நகர் பகுதியில் அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தபோது, சாலையோரம் உள்ள காலிமனை பகுதியில் மழை நீர் தேங்கி அகற்றபடாமல் இருந்ததை கண்ட அமைச்சர் பொன்முடி, "நான்கு நாட்களாக என்ன பன்னிட்டு இருக்கீங்க.. நான் ஆய்விற்கு வரும் வரை மழை நீரை எடுக்காமல் இருப்பீங்களா.. என்னதான் பன்னீட்டு இருக்கீங்க" என நகராட்சி ஆணையர் வீரமுத்துகுமாரை கடுமையாக சாடினார். இதனால் ஆய்வின் போது சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதே போன்று தாமரை குளம் பகுதியில் அமைச்சர் ஆய்விற்கு சென்றது அமைச்சர் வருகை புரிகிறார் என்பதால் நகராட்சி துப்புரவு பணியாளர்களை கொண்டு வேக வேகமாக சாலையின் ஓரத்தில் கொட்டப்பட்டிருந்த கழிவுகளை, கையில் கையுறை கூட இல்லாமல் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அகற்றினர். மழை காலம் என்பதால் கையில் கையுறை கூட இல்லாமல் துப்புரவு பணியாளர்கள் பணி செய்வதை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்தனர்.
நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் கையுறை வழங்கப்படுவதில்லையா என்று கேட்டபோது வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே நகராட்சி நிர்வாகத்தினர் வழங்குவதாகவும் வேதனை தெரிவித்தனர்.
இதனை அடுத்து “கையுறை வழங்கப்படுவதில்லையா?” என நகராட்சி ஆணையரிடம் கேட்டபொழுது ”கையுறை வழங்கப்படுவதாக” வேதனையுடன் தெரிவித்தார்.