செய்தியாளர்: காமராஜ்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியிலுள்ள வி.சாலையில் வரும் 23 ஆம் தேதி நடத்துவதற்கு அனுமதி கோரி விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் கடந்த 28ம் தேதி மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை ஆய்வு செய்த காவல் துறையினர், ‘மாநாடு நடத்துவதற்கு நடைமுறை வழிகாட்டுதல் எதுவும் குறிப்பிடவில்லை’ என்பதால் 21 கேள்விகள் கேட்டு கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
அதனை பெற்றுகொண்ட அக்கட்சியின் பொதுசெயலாளர் என்.ஆனந்த் 21 கேள்விகளுக்கான பதில் விளக்கத்தினை 6 ஆம் தேதி கொடுத்தார். அதனை தொடர்ந்து காவல்துறை அனுமதி தொடர்பாக இன்று நேரில் சந்திக்க தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பின் பேரில் இன்று அக்கட்சியின் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி, வழக்கறிஞர் அரவிந்த் ஆகியோரிடம் சீலிடப்பட்ட மாநாட்டிற்கான அனுமதி கடிதத்தை டிஎஸ்பி சுரேஷிடமிருந்து பெற்று கொண்டனர்.
அந்த கடிதத்தில் மாநாடு நடைபெற காவல்துறை சார்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றில்,
மாநாடு நடைபெறும் இடம் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகாமையில் உள்ளதால் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் மாநாடு நடத்த வேண்டும்,
முதியவர்கள், பெண்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்,
பார்கிங் வசதிகள் எந்தவித குளறுபடிகளும் இல்லாமல் இருக்க வேண்டும்
என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் காவல்துறை சார்பில் விதிக்கபட்டுள்ளன.
இதனை தொடர்ந்து அக்கட்சியின் நிர்வாகிகள் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.