Police pt desk
தமிழ்நாடு

விழுப்புரம்: இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் - சீல் வைக்கப்பட்ட கோயில் 9 மாதங்களுக்குப் பிறகு திறப்பு

மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு 9 மாதங்களுக்கு பிறகு கோயில் திறக்கப்பட்ட நிலையில், ஒருகால பூஜை மட்டும் நடத்தப்பட்டது. அதேநேரம், கோயிலுக்குள் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

webteam

செய்தியாளர்: முத்துக்குமரன்

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான தர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்துவது தொடர்பாக கடந்த வருடம் இரு சமுதாய மக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது மோதலாக மாறியது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி வருவாய்த் துறை அதிகாரிகள் கோயிலை பூட்டி சீல் வைத்தனர்.

Seal break

இதனைத் தொடர்ந்து பூட்டி சீல் வைக்கப்பட்ட தர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலை திறந்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலை திறந்து பொதுமக்கள் யாரையும் உள்ளே அனுமதிக்காமல் ஒருகால பூஜை மட்டும் நடத்த வேண்டும் என்றும், இதில் மீண்டும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் மறுபடியும் கோயிலை பூட்டி சீல் வைத்து நடவடிக்கை எடுக்கலாம் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்டிருந்த சீல்-ஐ, போலீஸ் பாதுகாப்போடு அகற்றிய வருவாய்த் துறை அதிகாரிகள், கோயிலின் பிரதான நுழைவு வாயிலை திறந்து வைத்தனர்.

தொடர்ந்து அர்ச்சர்கர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் கோயிலுக்குள் சென்று தர்மராஜா திரௌபதி அம்மனுக்கு பூஜை செய்தனர். அப்போது கோயிலுக்குள் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு கோயில் கதவுகள் மூடி பூட்டப்பட்டது.

மேல்பாதி தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில்

இதே போல் தினந்தோறும் காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஒரு கால பூஜை மட்டும் நடத்தப்பட்ட பிறகு மீண்டும் கோயில் மூடப்படும் என்றும், பொதுமக்கள் யாரும் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருசமுதாய மக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மூடப்பட்ட கோயில் மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கும் வகையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் சிவாச் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் மேல்பாதி கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.