விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூர் கிராமத்தில் சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் சிறுவன் சமயனின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிதி வழங்கவும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுவன் படுகொலை செய்யப்பட்டான் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனின் தாய் மற்றும் 14 வயது சிறுமிக்கு தலா 50ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இந்தத் துயரச்சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, துரிதமாக குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆராயி குடும்பத்தின் மீது நடத்தப்பட்ட இந்தக் கொடூரத் தாக்குதலில் காவல்துறை மெத்தனமாக செயல்பட்டு வந்தது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பெரிதாக பேசப்பட்டதற்கு பிறகே அவர்கள் விசாரணையை தொடங்கினர். சிறுவன் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளான். தாய், சகோதரி இருவரும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். சுயநினைவின்றி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில் இதே போன்று இரு சம்பவங்கள் கடந்த ஆண்டு நடைப்பெற்றதாகக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக புதியதலைமுறை களத்தில் ஆய்வு மேற்கொண்டதில் அக்கிராம மக்கள் அச்சத்தில் இருப்பது தெரியவந்தது. ஆராயி குடும்பத்தோடு சேர்த்து நடைப்பெற்ற மூன்று சம்பவங்களும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஆண் துணை இல்லாத வீடுகளிலே நடைப்பெற்றுள்ளது. இச்சம்பவங்களில் நடைப்பெற்ற தாக்குதல்களும் ஒரே மாதிரியாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
கடந்த மாதம் 22ஆம் தேதி நடைப்பெற்ற சம்பவத்திற்கு முதலமைச்சர் தற்போது தான் அறிக்கை வெளியிட்டு, சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். நடிகை ஸ்ரீதேவி மரணத்திற்கு உடனே இரங்கல் தெரிவித்த முதல்வருக்கு இந்தச் சம்பவத்தில் அறிக்கை வெளியிட 11 நாட்கள் தேவைப்பட்டுள்ளது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.