தமிழ்நாடு

விழுப்புரத்தில் நடந்தது சைகோ கொலையா? போலீஸ் சந்தேகம்!

விழுப்புரத்தில் நடந்தது சைகோ கொலையா? போலீஸ் சந்தேகம்!

webteam

விழுப்புரத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வெள்ளம்புத்தூர். தீவு போன்று தனியாக அமைந்துள்ள ஒரு கிராமம். பெரும்பாலும் பெண்கள் மட்டுமே அதிகம் வசிக்கும் கிராமமாக இருக்கிறது. இந்த ஊரில் இதுவரை ஒரே மாதிரியான 3 கொலைவெறி தாக்குதலும், பாலியல் வன்கொடுமை தாக்குதலும் நடைபெற்றிருப்பதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர் 

கடந்த ஆண்டு மே மாதம் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூங்கிக் கொண்டிருந்த போது தாக்கப்பட்டனர். அதில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. அதே போல் 2017 அக்டோபர் மாதம் மற்றொரு கொடூர சம்பவம்  நடந்துள்ளது. வன்னியர் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது 2 வயது மகளுடன் தூங்கிக் கொண்டிருந்த போது கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். தற்போது ஆராயி குடும்பத்தில் அதே போன்ற நிகழ்வு. 

ஏற்கெனவே நடைபெற்ற நிகழ்வுகளை வைத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணை மூலம் காவல்துறையினருக்கு பல்வேறு விஷயங்கள் தெரிய வந்துள்ளது. அதில் மிக முக்கியமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அனைவரும் வன்கொடுமை செய்யப்படும் முன் தலையில் தாக்கப்பட்டுள்ளனர். இரத்த வெள்ளத்தில் மிதந்த நிலையில் பாலியல் வன்கொடுமை நடத்தப்பட்டுள்ளது. மூன்று சம்பவத்திலும் குற்றவாளியை தடுக்க முயன்றவர்களும் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களும் மண்டை ஓடு உடையும் அளவுக்கு தாக்கப்பட்டுள்ளனர். காவல்துறை கொடுக்கும் தகவல் படி பார்க்கும் போது குற்றவாளிகள் கனமான ஆயுதத்தை அதே நேரம் கூர்மை இல்லாத ஆயுதத்தை பயன்படுத்தியுள்ளனர். அனைத்து சம்பவங்களில் தலையில் பலமாக தாக்கப்பட்டு ,சுயநினைவை இழக்க செய்யும் நிலைக்கு ஆளாக்கியுள்ளனர். காவல்துறை அதிகாரிகளிடம் பேசிய போது இதை ஒருவரோ அல்லது குறிப்பிட்ட கும்பலோ செய்திருக்க வாய்ப்புள்ளது என்றனர். மேலும் தாக்குதல் நடத்தும் தன்மை ஒரே மாதிரியாக இருப்பதாக தெரிவித்தனர்.