Villagers pt desk
தமிழ்நாடு

தேனி: மேலப்பட்டி கிராமத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த 6 இளைஞர்கள் - அச்சத்தில் கிராம மக்கள்

webteam

செய்தியாளர்: மலைச்சாமி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே மேலப்பட்டி என்ற கிராமம் உள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் கடந்த மாதம் அடுத்தடுத்து 6 இளைஞர்கள் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர். குறிப்பாக கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 4 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

Youths

இந்நிலையில், இதே கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரும் விபத்தில் மரணமடைந்தார். அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த மரணங்களால் கிராம மக்கள் பீதியடைந்தனர். இதனைத் தொடர்ந்து மேலப்பட்டி கிராம கமிட்டி சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது மேலப்பட்டி கிராம மக்கள், காவல் தெய்வங்களாக வழிபடும் விநாயகர், முத்தாலம்மன், காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மூலம் பரிகாரம் செய்வதென முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் கடந்த ஒரு வாரமாக விரதம் இருந்தனர், ஆடி வெள்ளி நாளான இன்று அதிகாலையில் அனைத்து வீடுகளில் இருந்தும் பால், பன்னீர் எடுத்து வந்து விநாயகர், முத்தாலம்மன் மற்றும் காளியம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதையடுத்து அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட கயிறு, மேலப்பட்டி கிராம மக்கள் அனைவரின் கையிலும் கட்டப்பட்டது.

Villagers fear

இந்த வழிபாடு மூலம் இனி வரும் நாட்களில் தங்கள் கிராமத்தில் இது போன்ற துயரச் சம்பவங்கள் எதுவும் நடக்காது என்று கிராம மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இதற்கிடையே கோவை பெட்ரோல் தீ விபத்தில் உயிரிழந்த அழகு ராஜாவின் தாய் தங்களுக்கு அரசு உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.