தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள வெள்ளகெவி ஊராட்சிக்கு உட்பட்டது சின்னூர் காலனி. இந்த மலை கிராமம், கொடைக்கானல் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியாக இருந்தாலும், சாலை வசதி இல்லாததால் பெரியகுளம் வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால், சின்னூர் காலனிக்கு செல்லும் வழியில் உள்ள கல்லாறு மற்றும் குப்பாம்பாறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த 10 நாட்களாக மலை கிராம மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை இருந்தது.
இந்த சூழலில், சின்னூர் காலனியைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக மலைக்கிராம இளைஞர்கள் 10 பேர் ஒன்றிணைந்து டோலி கட்டி 7 கிலோ மீட்டர் தொலைவிற்கு தூக்கி சென்றனர்.
பின்னர் சின்னையம்பாளையத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர். மலைக் கிராமத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால், பெண்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உள்ளிட்டோர் இதுபோன்று தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக பேசிய திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம், மலைக்கிராமத்திற்கு பாதை உருவாக்கித் தர அவசியம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அவர் பேசுகையில், “திண்டுக்கல் மாவட்டத்தில் இதுபோல் வேறு சில கிராமங்களிலும் இருக்கிறது. நான் சமீபத்தில்தான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். ஆனால், ஏற்கனவே பலமுறை இதுபோன்ற சம்பவங்களை அரசு கவனத்திற்கு சென்றுள்ளேன். சில இடங்களில் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது, சில இடங்களில் பிரச்சனை நீடிக்கிறது. நிச்சயமாக அந்த கிராம மக்களுக்கு சாலை வசதி அமைக்க உறுதி செய்வேன் என தெரிவிக்கிறேன்” என தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக பேசிய வெள்ளகெவி ஊராட்சி மன்ற தலைவர், “150 வருடங்களாக இதே நிலைதான் நீடித்துக் கொண்டிருக்கிறது. தீயணைப்புத் துறையினர் மூலமாக பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக கொண்டு வரும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதுவரை எங்களது கிராமங்களில் உயிர்சேதம் ஏற்பட்டதில்லை. அதைத் தவிர்க்கும் வண்ணம் மாவட்ட நிர்வாகம், எங்களது எம்.எல்.ஏ, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரது பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்சிக் காலத்திலேயே அவர்களுக்கு சாலை வசதிகளை செய்துகொடுக்கும் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. வனத்துறையின் மூலம் தடையில்லா சான்றும் பெற்றுவிட்டோம்” என தெரிவித்துள்ளார்.