பேர்செய்தியாளர்: ஆர்.மோகன்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு ஊராட்சிக்கு உட்பட்ட அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர், சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் உடலை நல்லடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். ஆனால் மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் வயல்வெளி பகுதியை கடந்து வாய்க்கால்களில் இறங்கி மறுபுறம் உள்ள மயானத்திற்குச் செல்லும் அவலநிலை ஏற்பட்டது.
மணிக்கரணை கூழவாய்க்காலில் பாலம் அமைத்து மயான சாலை அமைத்து தரக்கோரி இப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். இதனால் இறந்த முத்துகிருஷ்ணனின் உடலை சாகுபடிக்கு உழவு செய்யப்பட்ட வயலின் வழியே கொண்டு சென்று, தண்ணீர் செல்லும் வாய்க்காலில் இறங்கி மறுபுறம் அமைந்துள்ள மயாத்திற்கு எடுத்துச் சென்றனர். வாய்க்காலின் மேலே மின்கம்பிகள் தாழ்வாக செல்லும் நிலையில் அச்சத்துடனே வாய்க்காலை கடந்து செல்கின்னர்.
இதுகுறித்து நம்மிடையே பேசிய திருவெண்காடு கிராம மக்கள், “இதேபோல் ஒவ்வொரு முறையும் இறந்தவரின் உடல்களை நல்லடக்கம் செய்ய பல்வேறு சிரமங்களை கடந்தே அடக்கம் செய்கிறோம். வாய்க்கால்களில் குறைந்த அளவு தண்ணீர் செல்லும் போது இந்த நிலை என்றால், மழைக் காலங்களில் நிலை மிகவும் மோசமாகும். எனவே மணிக்கரணை கூழவாய்க்காலில் பாலம் அமைத்து மயானத்திற்கு செல்ல முறையான சாலை அமைத்து தர லேண்டும்” என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.