தமிழ்நாடு

நேர்மையை நிரூபிக்க கற்பூரம் அடித்து சத்தியம் செய்த ஊர்மக்கள் 

webteam

சிவகங்கை அருகே தாங்கள் தவறு செய்யவில்லை என்ற உண்மையை நிரூபிக்க கிராமம் ஒன்றில் வசித்த மக்கள் அனைவரும் கோயிலுக்குச் சென்று சத்தியம் செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அடுத்துள்ள விளாங்குடி கிராமத்தில் சந்தனமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா 2 நாட்களுக்கு முன் நடைபெற்றது. விழாவிற்கு கிராம பெரியவர்கள் சார்பில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவருமான கே.ஆர். ராமசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரை வரவேற்று கிராம மக்கள் சார்பில் ஐந்துக்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. 

இந்த பேனர்களை குடமுழுக்கு நடைபெறுவதற்கு முதல் நாள் இரவு அடையாளம் தெரியாத நபர்கள் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராமப்பெரியவர்கள் அந்தச் சேதமடைந்த பேனர்களை உடனே அப்புறப்படுத்திவிட்டனர். 

விழா நடந்து முடிந்த பிறகு கிராமக் கூட்டத்தைக் கூட்டி பேனர்களை சேதப்படுத்தியது யார் என விசாரணை நடத்தப்பட்டது. இதில் யாரையும் அடையாளம் காணமுடியாத நிலையில், கிராம மக்கள் திரண்டு கொல்லங்குடி காளி கோயிலில் சத்தியம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதன்படி விளாங்குடி கிராம மக்கள் அத்தனை பேரும் கொல்ல‌ங்குடி காளி கோயிலுக்குப் பேருந்து மூலம் சென்றனர். ‌அங்கு பூசாரி முன் சத்தியவாக்கு கூறி ஒவ்வொருவராக சூடத்தை அணைத்து சத்தியம் செய்தனர்

தாங்கள் நேர்மையானவர்கள், எந்தத் தவறும் செய்யாதவர்கள் என்பதை நிரூபிக்க கோயிலுக்குப் போய் நின்ற விளாங்குடி மக்கள், கடவுளுக்கு முன் தங்கள் நியாயத்தை நிரூபித்துவிட்டதாக நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.