விக்கிரவாண்டி இடைத்தேர்தல் PT
தமிழ்நாடு

மந்தகதியில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை | திமுக வேட்பாளர் 15,000 வாக்குகள் முன்னிலை!

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.

PT WEB

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுவதுடன், வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட உள்ளது. பாதுகாப்பு பணியில் ஆயிரத்து 195 காவலர்கள் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக தரப்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உட்பட 29 பேர் போட்டியிட்டனர். இத்தேர்தலில் 82.47 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. ஜூலை 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

திமுக முன்னிலை!

முதல் சுற்றில் திமுக அன்னியூர் சிவா 8,564 வாக்குகளும், பாமக வேட்பாளர் 3,096 வாக்குகள் பெற்றுள்ளன. நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 240 வாக்குகளும் கிடைத்துள்ளன.

மூன்றாவது சுற்றில் திமுக அன்னியூர் சிவா 18057 வாக்குகளும், பாமக வேட்பாளர் 7323 வாக்குகள் பெற்றுள்ளன. நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 1120 வாக்குகளும் கிடைத்துள்ளன.

காலை 10 மணி நிலவரப்படி, திமுக அன்னியூர் சிவா 24,169 வாக்குகளும், பாமக வேட்பாளர் 9,131 வாக்குகள் பெற்றுள்ளன. நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 1,383 வாக்குகளும் கிடைத்துள்ளன.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மந்தகதியில் நடைபெறுவதை அங்குள்ள சூழல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே அடுத்தச்சுற்றுக்கான இயந்திரங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதனால் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஆகி வருகின்றன. அத்துடன், வாக்கு எண்ணப்படும் மையத்தில் பெரிய அளவில் கூட்டம் இல்லை. வெற்றிபெறும் நிலையில் உள்ள திமுகவினர் மட்டுமே ஓரளவு இருக்கின்றனர்.