C.Anbumani pt desk
தமிழ்நாடு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பாமக வேட்பாளராக ’சி.அன்புமணி’ அறிவிப்பு - வெற்றி வாய்ப்பு எப்படி?

இரா.செந்தில் கரிகாலன்

ஜூலை பத்தாம் தேதி நடைபெறவிருக்கும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக பாமக வேட்பாளராக அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளார். பாமக தலைவர் அன்புமணி இன்று அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பாமகவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ள தொகுதியாகவும், வன்னியர் சமூக வாக்குகள் பெரும்பான்மையாகவும் உள்ள தொகுதி விக்கிரவாண்டி. இந்த நிலையில், இந்தத் தொகுதியில் பாமகவுக்கான செல்வாக்கு எப்படி என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்...

PMK Candidate

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த திமுகவைச் சேர்ந்த புகழேந்தி, கடந்த ஏப்ரல் ஐந்தாம் தேதி, நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது மேடையிலேயே மயங்கி விழுந்தார்..,தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன் காரணமாக, அந்தத் தொகுதிக்கு வரும் ஜூலை பத்தாம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது..,திமுக ஏற்கெனவே வேட்பாளரை அறிவித்துவிட்ட நிலையில், சீமானும் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அபிநயாவை அறிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில், பாமக வேட்பாளராக அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 2016 தேர்தலிலும் இந்தத் தொகுதியில் போட்டியிட்டவர்.

அன்புமணி-க்கான வெற்றி வாய்ப்பு எப்படி?...

தொகுதி மறுசீரமைப்பில் 2011-ல் தான் விக்கிரவாண்டி தொகுதி உருவானது. அந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக அங்கம் வகித்தது. ஆனால், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி.எம் வேட்பாளர் ராமமூர்த்தி வெற்றிபெற்றார். 2016 தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டு, 41428 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்துக்கு வந்தது.

DMK Candidate

2019-ல் நடந்த இடைத்தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்தமிழ் செல்வன் மாபெரும் வெற்றிபெற்றார். அப்போது, பாமக அதிமுக கூட்டணியில்தான்...அதிமுகவின் வெற்றியில் பாமகவின் பங்கு அதிகம் என அப்போது அரசியல் பார்வையாளர்களால் சொல்லப்பட்டது. தொடர்ந்து 2021 தேர்தலில் பாமக அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்தது. திமுக வேட்பாளர் புகழேந்தி வெற்றி பெற்றார்.., தொடர்ந்து, 2024 தேர்தலில், விழுப்பும் நாடாளுமன்றத் தேர்தலில் பாமகதான் போட்டியிட்டது. அந்தத் தொகுதியில்தான், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியும் வருகிறது.

பாமக சார்பில் போட்டியிட்ட முரளி சங்கர், இந்தத் தொகுதியில் 32 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருக்கிறார். வன்னியர் வாக்கு சதவிகிதம் அதிகமாக உள்ள தொகுதியாக இருப்பதால் பாமகவுக்கு செல்வாக்கு மிக்க தொகுதியாக இருக்கிறது. அதனை மனதில் வைத்துதான் தற்போது பாமகவே இங்கு போட்டியிட முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேவேளை, இதே தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, 65365 வாக்குகளைப் பெற்றது. அதனால் களம் போட்டி நிறைந்ததாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ADMK Symbol

எப்படியாவது, அதிமுகவை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்தையாவது பிடித்துவிட்டால், 2026 தேர்தலில் அது மிகப்பெரிய அளவில் கைகொடுக்கும் என நம்புகிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி..