அன்புமணி புதியதலைமுறை
தமிழ்நாடு

அதிமுகவின் வாக்குகளை பெற ஜெயலலிதாவின் படத்தை பயன்படுத்துவது ஏன்? அன்புமணி சொல்லும் காரணம்!

PT WEB

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது “பொது எதிரியாக திமுக-வை பார்க்க வேண்டியது அவசியம். அதனால் அதிமுக மற்றும் தேமுதிக தொண்டர்கள் பா.ம.க வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசி வருகிறார். இத்தேர்தலை அதிமுக புறக்கணித்து இருப்பதால் அதிமுகவின் வாக்குகளை பெற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை பயன்படுத்தி வருகிறது பா.ம.க.

விக்கிரவாண்டியில் ஜெயலலிதா புகைப்படத்துடன் பாமக பிரசாரம்

ஜெயலலிதாவின் புகைப்படங்களை பாமக-வினர் வைக்க, அதிமுக-வின் வாக்குகளை பெற வேண்டும் என்பதே நோக்கம் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது அதற்கு வேறொரு விளக்கம் கொடுக்கின்றனர் பாமக-வினர்.

அதன்படி, “ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்ற எங்கள் கூட்டணி கட்சியினரின் (தேசிய ஜனநாயக கூட்டணி) தலைவர்கள் படத்தோடு பிரசாரம் நடத்த நினைத்தோம். அப்படித்தான் மோடி அவர்களின் படமும் இருந்தது. அதேபோலவே ஜெயலலிதாவின் படமும் இருந்தது. மட்டுமன்றி ஜெயலலிதாவின் புகைப்படத்தை நாங்கள் பயன்படுத்தக்கூடாது என கூற யாருக்கும் உரிமையில்லை” என்றுள்ளார் அன்புமணி.

கடந்த மக்களவை தேர்தலின்போது விக்கிரவாண்டி தொகுதியில் பெற்ற 65,365 வாக்குகளை, இப்போது பெற வியூகம் வகுத்துள்ளது பாமக. திமுக வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க மறுக்கிறது என்றும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் போன்றவற்றிற்கு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டி இருப்பதாகவும் கூறுகிறது பா.ம.க.

ஜெயலலிதா படத்துடன் பாப்பனப்பட்டு, பனையபுரம், காணை, கெடார் உள்ளிட்ட கிராமங்களில் பாமக பரப்புரை முடித்து இருக்கிறது. 13 ஆண்டுகளுக்கு பிறகு இடைத் தேர்தலில் போட்டியிடும் பா.ம.க வின் வியூகம் களத்தில் வித்தியாசமாகவே பார்க்கப்படுகிறது.