விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கியுள்ளது.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவின் காரணமாக அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பானது 18வது மக்களவை தேர்தல் முடிவடைந்த கையோடு அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை அரசியல் கட்சிகளின் பிரசாரம் ஓய்வடைந்த சூழலில், இன்று இத்தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.
முன்னதாக, காலை 6 மணி அளவில் மாதிரி வாக்குப்பதிவுகள் நடைபெற்றன. தொடர்ந்து 7 மணி அளவில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
இத்தொகுதியில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி தரப்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்பதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேட்சைகள் என மொத்தம் 29 போட்டியாளர்கள் போட்டியிடுவதால், இரண்டு பெட்டிகள் அமைக்கப்பட்டு வாக்குகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக, மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,37,031 வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 276 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், 662 வாக்குப்பதிவு கருவிகளும், 330 கட்டுப்பாட்டு கருவிகளும், 357 விவிபேட் கருவிகள் என மொத்தம் 1,349 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இத்தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ளன. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை 45 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதால், அங்கு தேர்தல் பணிகளை கண்காணிக்க 53 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தேர்தல் நேரத்தில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகாகவும் மாவட்டம் முழுவதும் 2,000க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதற்கான, வாக்கு எண்ணிக்கை வரும் 13ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.