விக்கிரமராஜா செ.சுபாஷ்
தமிழ்நாடு

“வணிகர்கள் 18 மணிநேரம் வேலை செய்கிறோம்; எங்களுக்கு 12 மணிநேரம் பிரச்னையாக இருக்காது!” - விக்கிரமராஜா

”அரசின் 12 மணி நேர வேலைநேர திட்டத்துக்கு சர்வ கட்சிகளும் ஆதரவு தர வேண்டும்” - தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா.

PT

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா, மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 12 மணிநேர தொழிலாளர் மசோதா குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

12 மணி நேரம் வேலை செய்யும் போது பொருளாதாரம் உயரும்!

அவர் கூறுகையில், “தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பாக 12 மணி நேர வேலை என்ற திட்டத்தை அரசு சட்டமாக்குவதை மனமுவந்து வரவேற்கிறோம். தமிழக முதல்வருக்கு அதற்காக நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். 12 மணி நேரம் வேலை செய்கிற போது எங்களின் பொருளாதாரம் உயரும், வேலை வாய்ப்பு அதிகமாக கிடைக்கும். பல நாடுகளிலிருந்து பல்வேறு நிறுவனங்கள் வேலையை தொடங்கி தருவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. அதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கிறது. அப்படியான நிலையில் இங்கு இச்சட்டத்துக்கு எதிராக தொழிலாளர்கள் பிரச்னை, போராட்டம் என்பதெல்லாம் இல்லாத ஒரு நிலை இருக்கவேண்டும். அப்போதுதான் மற்ற நாடுகளில் இருந்து வணிகம் செய்வதற்கும், தொழில் தொடங்குவதற்கும் மக்கள் ஆர்வமாக வருவார்கள்.

விக்கிரமராஜா

இது (12 மணி நேர பணி) ஆக்கப்பூர்வமான பணி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பல்வேறு அரசியல் கட்சிகள் சில கட்டத்தில் தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்து தான் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கும் மனதில் இது சரியான தீர்மானம் என்பது புரிந்திருக்கும். அவர்கள் விரைவில் அமைச்சரை சந்திக்க இருக்கிறார்கள். அப்போது நல்ல தீர்மானம் எடுப்பார்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்றார்.

12 மணிநேரம் வேலையை இப்போதும் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள்!

இவ்விவகாரத்தில் தொழிலாளர் சங்கமே எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “12 மணி நேரம் வேலை என்பது, இப்போதும் பலரும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இனி அப்படி வேலை செய்தால் மூன்று நாள் விடுப்பு என்று அரசு சொல்லி இருக்கிறது. இது பெரிய வரப்பிரசாதம்.

விக்கிரமராஜா

இப்போது காலை உணவு, மதிய உணவு, இடைவேளை என பல்வேறு நேரங்கள் ஒதுக்கப்படுவதால் வேலையில் சுணக்கம் ஏற்படுகிறது. அப்படியானவர்களை இதுபோன்று ஊக்கப்படுத்துகிற போது, அனைத்து துறைகளிலும் சுணக்கம் இல்லாத வேலை நடக்கக்கூடிய நல்ல வாய்ப்பு ஏற்படும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை” என்றார்.

நாடு வளர வேண்டும் என்பதற்காகவே அரசு இதை கொண்டுவந்துள்ளது!

ஷிப்ட் அடிப்படையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இது எப்படி பொருந்தும் என்ற கேள்வி குறித்து பேசுகையில், “சுழற்சிமுறை அடிப்படையில் வேலை செய்தாலும் கூட 24 மணி நேரம்தான். வணிகர்களைப் பொறுத்தவரை நாங்கள் 18 மணி நேரம் அன்றாடம் வேலை பார்த்து வருகிறோம். சுழற்சிமுறையில் வேலை பார்க்கும் போது 12 மணி நேரம் பார்க்கலாம். இடையில் உணவு மற்றும் இடைவேளைகள் உள்ளது. இது ஒரு பிரச்னையாக இருக்காது.

விக்கிரமராஜா

நாடு வளர வேண்டும், மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்று அரசு வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுப்பு கொடுக்கிறது. இதையெல்லாம் பரிசீலனை செய்து சர்வ கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் என்பதை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்துகிறது” என்றார்.