தமிழ்நாடு

கொரோனாவை விட கொடுமையானது பசி - வியாபாரிகளுக்கு அரசு செய்ய வேண்டியது குறித்து விக்கிரமராஜா

கொரோனாவை விட கொடுமையானது பசி - வியாபாரிகளுக்கு அரசு செய்ய வேண்டியது குறித்து விக்கிரமராஜா

webteam

பொதுமுடக்கத்தின்போது அரசு, வியாபாரிகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் விக்கிரமராஜா விரிவான விளக்கம் கொடுத்துள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மே 4 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு வாரங்களுக்கு அதனை மத்திய அரசு நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் பிரிக்கப்பட்டு அதற்கேற்றவாறு தளர்வுகளை அமல்படுத்திக்கொள்ள மாநில அரசுகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆலோசிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், கொரோனா தொற்று குறைந்த கிராமப்புற பகுதிகளில் கூடுதல் தளர்வு அளிப்பது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் பற்றியும் மக்களுக்கு கூடுதல் நிவாரண உதவி வழங்குவது பற்றியும் முடிவெடுக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. மத்திய அரசின் பொதுமுடக்க நீட்டிப்பை அமல்படுத்துவது பற்றியும் சென்னையில் கொரோனா பரவலைத் தடுப்பது பற்றியும் விரிவாக ஆய்வு நடத்தவும் வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், பொதுமுடக்க காலத்தில் வியாபாரிகளுக்கு அரசு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் விக்கிரமராஜா கூறுகையில், “மத்திய அரசு மூன்றாவது முறையாக ஊரடங்கை நீட்டித்துள்ளது. ஊரடங்கில் பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்தாலும் மாநில அரசிடம் முடிவை விட்டுவிட்டார்கள். மத்திய அரசிடம் எழுத்துப்பூர்வமாக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். ஆனால் மத்திய அரசு இதுவரை எந்த கோரிக்கைக்கும் பதில் தரவில்லை. குறிப்பாக, சாமானிய வியாபாரிகளுக்கு குறைந்தபட்சம் 12 மாதமாவது வட்டியில்லா கடன்களை தரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வங்கிக் கடனில் இ,எம்.ஐ கட்ட வேண்டாம் என்று சொன்னாலும் கூட அதன் வட்டி விகிதம் அப்படியே இருக்கிறது. கடைகளை நாங்கள் பூட்டி வைத்திருந்தாலும் கூட அதற்கு வாடகை கொடுக்க வேண்டி உள்ளது. இதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வலியுறுத்தல்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பிரதமர் அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார். சலுகைகளை தரவில்லை என்றால் வணிகர் சங்க பேரமைப்பு கடுமையான பாதிப்புக்குள்ளாகும் என்பதை மத்திய அரசுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்

அதேபோல் மாநில அரசு இங்கு சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்றாக பிரித்துள்ளார்கள். அதில், பச்சை மண்டலங்களில் அனைத்து கடைகளும் திறக்க அரசு அனுமதி தர வேண்டும். ஆரஞ்சு மண்டலங்களில் அனைத்து கடைகளையும் ஒரு குறிப்பிட்ட நேரமாவது திறக்க அனுமதி தர வேண்டும். சிவப்பு மண்டலங்களில் மட்டும் எப்படி கடையை திறப்பது என்பது குறித்து மாநில அரசு அதிகாரிகள், தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பு நிர்வாகிகளோடு கலந்து கொண்டு முடிவெடுக்க வேண்டும். அதேபோல் கட்டட வரிவிதிப்புகள், சாக்கடை வரிவிதிப்புகள், மின்சார கட்டணம் போன்றவைகளை ஊரடங்கு உத்தரவு என்று தொடங்கப்பட்டது முதல் முடியும் வரை கட்டாய வசூலிப்பு என்பது கூடாது எனவும் முழுவதுமாக தடை செய்ய வேண்டும்.

சாமானிய வியாபாரிகள் பல லட்சம் பேர் அடுத்தவேளை உணவுக்கு அடுத்தவர்களிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கு மாநில அரசு குறைந்தபட்சம் மாதம் 5 ஆயிரம் ரூபாயும், மளிகை பொருட்களும் வழங்க வேண்டும்.

கொரோனா வைரஸை விட கொடுமையானது பசி. பசிக்கு மக்கள் தள்ளப்பட்டால் பூகம்பமாக வெளியே வந்துவிடுவார்கள். மக்களின் தேவையை பூர்த்தி செய்தால் மட்டுமே அரசு, ஊரடங்கை பூர்த்தி செய்ய முடியும். சட்டவிதிகளுக்கு உட்பட்டு கடைகளை திறக்க நாங்கள் தயாராக உள்ளோம். கொரோனாவை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு வணிகர் சங்க பேரமைப்பு ஆதரவை தெரிவித்து வருகிறது.

முதலில் சின்ன சின்ன எலெக்ட்ரிக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும். பின்னர் பெரிய கடைகளை படிப்படியாக திறந்துகொள்ள அனுமதிக்க வேண்டும். ” எனத் தெரிவித்துள்ளார்.