வாட்டாள் நாகராஜ், விஜயகாந்த் ட்விட்டர்
தமிழ்நாடு

50 பேருடன் வந்த வாட்டாள் நாகராஜ்.. கர்நாடகாவில் தனியொருவனாய் களத்தில் குதித்து விரட்டிய விஜயகாந்த்!

கர்நாடகாவில் வாட்டாள் நாகராஜ் என்பவரை, மறைந்த நடிகர் விஜயகாந்த் ஓடஓட விரட்டிய சம்பவம் குறித்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prakash J

’தமிழகத்திற்குக் காவிரி நீரைப் பகிர்ந்து அளிக்க வேண்டும்’ என ஒவ்வொரு முறையும் நதிநீர் மன்றத்தின் உத்தரவு வரும்போதெல்லாம் போர்க்களமாய் மாறிவிடும், கர்நாடகா. ஆம், அந்த மாநிலம் எப்போதும் காவிரை நீரைத் தமிழகத்திற்குத் தரக்கூடாது என்பதிலேயே கவனமாய் இருக்கிறது. ஆட்சிகள் மாறினாலும், காவிரிக்குத் தீர்வு என்பது இன்றுவரை வெறும் கனவாகவே உள்ளது.

அதிலும் இந்தக் காவிரி விவகாரத்தின்போது முதல் ஆளாக வந்து நிற்கக் கூடியவர் கர்நாடகாவைச் சேர்ந்த ‘கன்னட சலுவாலி வட்டாள் பக்‌ஷா’ அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ். ஆனால், அவரையே அவர் மாநில எல்லையில் ஓடஓட விரட்டியவர், இன்று ஒரேயடியாய்க் கண்மூடியிருக்கும் கேப்டன் விஜயகாந்த். இயக்குநர் இமயம் பாரதி ராஜா இயக்கத்தில், விஜயகாந்த் நடித்த படம், ‘தமிழ் செல்வன்’. இந்தப் படத்தின் ஷூட்டிங், கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே கொல்லேகால் பகுதியில் நடைபெற்றது.

அந்தச் சமயம், காவிரிப் பிரச்னை தொடர்பாக விஜயகாந்த் பேசிய கருத்து கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன், விஜயகாந்த் படப்பிடிப்பு மைசூருவில் நடைபெறுகிறது என்று தெரிந்தவுடன் வட்டாள் நாகராஜ் உள்ளிட்டவர்கள், சுமார் 50 பேருடன் கெஸ்ட் ஹவுஸில் வந்து இறங்கி கோஷம்போடத் தொடங்கிவிட்டனர். அங்கு, தமிழ்மொழியில் வைக்கப்பட்டிருந்த கிளாப் போர்டை பயன்படுத்தக் கூடாது என தகராறு செய்தனர். இந்த விஷயம் கேப்டன் விஜயகாந்த் காதுக்கும் சென்றுள்ளது. அதைக் கேள்விப்பட்ட விஜயகாந்த், வேட்டியை மடித்துக் கட்டியபடி, காரில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்துக்கொண்டு, வாட்டாள் நாகராஜைக் குழுவினரைத் தாக்கக் கிளம்பினாராம். இதைப் பார்த்த வாட்டாள் நாகராஜ் குழுவினர் ஓட்டமெடுத்ததாம். இம்மண்ணைவிட்டுப் பிரிந்திருக்கும் விஜயகாந்த்தின் நினைவலைகள் குறித்துப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதில் இந்த விஷயமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கண்மூடி கேப்டன் உறங்கினாலும், அவரால் ஆன செயல்கள் அனைத்தும் இன்று எல்லோரிடமும் நிழலாடுகின்றன. என்றும் நிழலாடும்.