செய்தியாளர் - சே.விவேகானந்தன்
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தின் மறைவை அடுத்து, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அவரது கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் அவருக்கு ஈமச்சடங்குகளை செய்து வருகின்றனர். அப்படி தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில், தேமுதிக மாநில அவைத்தலைவர் இளங்கோவன் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் மொட்டை அடித்து விஜயகாந்த்திற்கு ஈமச்சடங்கு செய்தனர்.
அப்போது ஆற்றின் கரையோரத்தில் நடைபெற்ற ஈமச்சடங்கின் போது, மூன்று கருடன்கள் வலம் வந்ததாக தெரிகிறது. இதனிடையே அங்கிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், “கேப்டன் வாழ்க, கேப்டன் விஜயகாந்த் வாழ்க” என்று கோஷமிட்டனர்.
தொடர்ந்து, மாநில அவைத்தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான இடத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு முதன்முதலாக மார்பளவு திருவுருவுச்சிலை திறக்கப்பட்டது. பின்பு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நடித்த பல படங்களின் படப்பிடிப்புகள், ஒகேனக்கல் பகுதியில் நடைபெற்றுள்ளன. இதனால் ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகள், தொழிலாளர்கள் என பலர் அவருக்கு நெருக்கமாக இருந்துள்ளனர். அவற்றை நினைவு கூறும் வகையில், ஒகேனக்கலில் முதன்முறையாக தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.