தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய், கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து, கடந்த 22-ம் தேதி கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். கட்சியின் மாநாடு செப்டம்பர் இம்மாத இறுதியில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ராகுல் காந்தி அறிவுரையின் அடிப்படையிலேயே விஜய் கட்சி தொடங்கினார் என பாஜக உறுப்பினரும், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான விஜயதரணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நம்மிடையே பேசியதாவது, “நான் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் போது, டெல்லியில் ஒரு நாள் நடிகர் விஜய்யை காங்கிரஸில் சேர்ப்பதற்காக சில தலைவர்கள் அழைத்து வந்தார்கள். அப்போது ராகுல் காந்தி ‘நீங்கள் தனி கட்சி தொடங்கினால் நன்றாக இருக்கும்’ என்று தெரிவித்தார். அந்த அடிப்படையில் விஜய் இப்போது கட்சி தொடங்கி இருக்கலாம்...
வரும் காலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் விஜய் கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கிறது... ஒரு டெக்கானிக் மூவ்மெண்ட் தமிழகத்தில் நடக்கும்.
நான் பாஜகவில் சேரும்போது எம்.பி சீட் தருவதாக சொன்னார்கள். ஆனால் கன்னியாகுமரியில் மூத்த தலைவர் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர் மூத்த தலைவர் மட்டுமல்ல, என் அண்ணாச்சியும்கூட. அதனால் நானே அவரோடு இணைந்து தேர்தல் களப்பணி ஆற்றினேன். ஆனால் அவர் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 60 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்றார். அவருடன் இணைந்து தேர்தல் பணியாற்றிய எனக்கும் இது வருத்தம்தான். குமரியில் பாஜக வலுவான கட்சி என்ற நிலையில் இப்படி தோல்விபெற்றது கூடுதல் வருத்தம். வரும் தேர்தலில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.
அதேநேரம், சில காலம் பொறுக்க வேண்டும் என்று தமிழிசை சொன்ன அறிவுரையை ஏற்றுக் கொள்கிறேன். என்னுடைய ஆதரவாளர்கள் தொடர்ந்து தொலைபேசியில், ஒரு நாளைக்கு 500 பேர் தொடர்பு கொண்டு கட்சியில் என்ன பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கேட்பதால் சில தினங்களுக்கு முன்பு மேடையில், ‘விரைவில் எனக்கு பொறுப்பு வழங்கப்படும்’ என அவர்களை உற்சாகப்படுத்த கருத்து தெரிவித்தேன். மற்றபடி எதுமில்லை. கட்சிப்பணி ஆற்றவும் தேசப்பணி ஆற்றவுமே நான் பாஜக-வில் இணைந்தேன். அதற்கான அங்கீகாரங்கள் எனக்கு வழங்கப்படும் என நம்புகிறேன்.
மத்திய அமைச்சர் எல். முருகனை தமிழர் அல்ல என்று சொல்லும் சீமான் முதலில் தன்னுடைய பாரம்பரியத்தை சொல்ல வேண்டும்” என தெரிவித்துள்ளார்.