தமிழக வெற்றி கழகம் pt web
தமிழ்நாடு

‘எண்ணித் துணிக கருமம்’ உருவானது தமிழக வெற்றி கழகம்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Angeshwar G

தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக உள்ள விஜய் வெளியிட்டுள்ள முதல் அறிக்கையில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும், என் பணிவான வணக்கங்கள் என அறிக்கையை தொடங்கியுள்ள விஜய், விஜய் மக்கள் இயக்கம் மூலம் தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும் செய்து வந்தேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றி கழகம்!

ஊழல் மலிந்த அரசியல் கலாசாரம், பிளவுவாத அரசியல் கலாசாரம் என இருபுறமும் உள்ள நிலையில், எண்ணித் துணிக கருமம் என்ற வள்ளுவன் வாக்கின்படியே தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பதான் நமது இலக்கு எனக் விஜய் குறிப்பிட்டுள்ளார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்

அரசியல் என்பது மற்றொரு தொழில் அல்ல, அது ஒரு புனிதமான மக்கள் பணி என்றும், அரசியல் பொழுதுபோக்கு அல்ல, எனது ஆழமான வேட்கை என்றும் கூறியுள்ள விஜய், ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படத்தை முடித்து கொண்டு முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன் என்று அறிவித்துள்ளார்.