முரசொலி செல்வம், எஸ் ஏ சந்திரசேகர் pt web
தமிழ்நாடு

விஜய் குடும்பத்திற்கும் முரசொலி செல்வத்திற்கும் இடையே உள்ள நட்பு.. உணர்வுப்பூர்வமாக பேசிய எஸ்.ஏ.சி!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் குடும்பத்திற்கும், திமுகவின் முரசொலி செல்வத்திற்கும் நீண்ட நெடிய தொடர்பு இருக்கிறது.

PT WEB

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வத்தின் உடல், சென்னை கோபாலபுரம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் இரண்டாவது நாளாக இன்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதில் இயக்குநர்கள் பி.வாசு, பார்த்திபன், நடிகர்கள் விஜயகுமார், ராஜேஷ் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதில் நேற்றைய தினம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்-யின் மனைவி சங்கீதா, தன் மகளுடன் சென்று நேற்று அஞ்சலி செலுத்தி இருந்தார்.

தொடர்ந்து, விஜய்யின் தந்தையான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று செல்வத்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் குடும்பத்திற்கும், திமுகவின் முரசொலி செல்வத்திற்கும் நீண்ட நெடிய தொடர்பு இருக்கிறது. சொல்லப்போனால் இது விஜய்யால் தொடங்கிய உறவில்லை. அவரது தந்தை, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரால் உருவான உறவு. தங்களுக்கு இடையே உள்ள நட்பு குறித்து முரசொலி செல்வத்தின் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியபின் விஜய்-யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஊடகங்களுக்கு விவரித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் இருந்தும்கூட தன்னை ஒரு அரசியல்வாதியாக முரசொலி செல்வம் காட்டிக்கொள்ள மாட்டார்” என கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “கலைஞருடன் நெருங்கிப் பழகக்கூடிய வாய்ப்பை முரசொலி செல்வம்தான் ஏற்படுத்திக் கொடுத்தார். 1984ல் இருந்து பழகி கலைஞருடன் ஒரு திரைப்படத்திலாவது வேலை செய்ய வேண்டும் என நினைக்கும்போது, இவர்தான் கலைஞரிடம் கதை சொல்ல வைத்தார். நீதிக்கு தண்டனை என்ற படம் அது. அதன்பின் கலைஞருடன் தொடர்ந்து 3 படம் செய்தேன். அத்தனைக்கும் உடன் இருந்தார். பழகுவதற்கு அவ்வளவு இனிமையானவர். எளிமையானவர். நல்ல நண்பரை இழந்துவிட்டேன். அவர் குடும்பத்திற்கு இறைவன் ஆறுதலைக் கொடுக்க வேண்டும்..” என தெரிவித்தார்.