தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்பைவிட நன்றாக இருப்பதாக அவரது மகன் விஜய பிரபாகர் தெரிவித்துள்ளார். சென்னை கோவிலம்பாக்கத்தில் கட்சி நிர்வாகியின் சுப நிகழ்ச்சியில் விஜயபிரபாகர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓராண்டு கால திமுகவின் ஆட்சியில் மின்வெட்டு அதிகம் இருப்பதாகவும், திமுக சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக உள்ளது எனவும் கூறினார்.
சென்னை கோவிலம்பாக்கத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் சுப நிகழ்ச்சி ஒன்றில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஓராண்டு கால திமுகவின் ஆட்சியில் மின்வெட்டு அதிகம் உள்ளது. அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாமல் இருந்தது. ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும், வர வர கோட்டை விடுகிறார்கள் என்றார். தொடர்ந்து பேசிய அவர், தேர் விபத்து தொடர்பாக மக்கள் மீது வீண்பழி சுமத்துவதுபோல் உள்ளது. அனுமதி பெறவில்லை என்றால் தடுத்திருக்கலாம். இனிவரும் காலங்களில் இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் திமுக சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளது. அதிமுகவினர் சொல்வது போல் திமுக போட்டோ சூட் அரசியல்தான் செய்து கொண்டிருக்கிறது. ஒரு இடத்திற்கு போய் டீக் குடிப்பது, உணவு உண்பது, தேர்தல் வாக்குறுதியை செய்யவில்லை. எல்லாம் செய்வதுபோல் ஒரு மாயையை உருவாக்குகிறார்கள். அடிப்படை தேவையை மக்களுக்கு செய்தாலே நன்றாக இருக்கும் என்றார்.
விஜயகாந்த் உடல்நிலை குறித்து கேட்டதற்கு, கேப்டன் நன்றாக இருக்கிறார் என்றும், முன்பை விட சிறப்பாக இருப்பதாகவும் கூறினார். மேலும் பட்டண பிரவேசம் குறித்து கேட்டதற்கு தலைமை அறிவிப்பதாக தெரிவித்தார்.