vijay pt
தமிழ்நாடு

தவெகவின் முதல் மாலை அம்பேத்கருக்கு.. விஜய்யின் முதல் மரியாதை பெரியாருக்கு.. அனல்பறக்கும் விவாதம்!

புதிதாக கட்சி தொடங்கியதெல்லாம் இருக்கட்டும். கொள்கை, கோட்பாடுகள் என்ன என்று தன் பக்கம் வந்த கேள்விக்கணைகளுக்கு தனது செயலால் பதில் சொல்லியுள்ளார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.

யுவபுருஷ்

கட்சி தொடங்கியது முதல் இதுவரை எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாத விஜய், பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மரியாதை செய்துள்ளதுதான் இப்போதைக்கு Talk of the town. யார் என்ன கேட்டாலும் இதுதான் எனது கொள்கை என்று தனது நடவடிக்கைகளால் சொல்லாமல் சொல்லி வருகிறார் விஜய். இதன் மூலம் விஜய் போடும் கணக்கு என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

இந்த ஆண்டு பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், கடந்த ஆண்டில் இருந்தே அதற்கான ஆயத்த பணிகளை துவங்கியிருந்தார். 2009ம் ஆண்டு முதலே தனது மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நலத்திட்டங்கள், உதவிகளை செய்துவந்த விஜய், கடந்த ஆண்டில் இருந்துதான் அரசியல் எனும் கடலில் ஆழம் பார்க்கத் துவங்கினார். அதன்படி, சமத்துவம், சமூக நீதிக்கு அடையாளமாகத் திகழும் சட்டமேதை அம்பேத்கருக்கு முதல் முறையாக மரியாதை செய்ய திட்டமிட்டார் விஜய்.

அப்படி, அவரது உத்தரவின் பேரில் கடந்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் விஜய் மக்கள் இயக்கத்தினர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இருக்கும் அம்பேத்கர் சிலைக்கு முதல் மாலை அணிவித்தவர்கள், அடுத்தடுத்து தீரன் சின்னமலை உள்ளிட்ட தலைவர்களுக்கு அவர்களின் பிறந்தநாள், நினைவுநாளில் மரியாதை செய்தனர் விஜய் மக்கள் இயக்கத்தினர். அரசியல் கட்சி தலைவர்களுக்கும் தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து சொல்லத் துவங்கினார் விஜய்.

அம்பேத்கர்.. பெரியார்.. காமராஜரை படியுங்கள்..!

தொடர்ந்து, கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தொகுதி வாரியாக கல்வி விருது வழங்கிய விஜய், தலைவர்கள் குறித்து படிக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். அம்பேத்கர், பெரியார், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் என்றார். தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்ற கல்வி விருது விழாவில் பேசிய அவர், செய்தித்தாள், சமூகவலைதளங்களில் வரக்கூடிய செய்திகளைப் பார்த்து எது சரி தவறு என்று பகுத்துப்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தினார்.

தொடர்ச்சியாக, இந்த ஆண்டு கட்சி தொடங்கி கட்சிக்கான கொடி, கொடி பாடல் என்று அதிரடி காட்டி வரும் விஜய், அடுத்த மாதம் மாநாட்டை நடத்த திட்டமிட்டிருக்கிறார். கட்சி தொடங்கிய பிறகு, கொடி அறிமுக விழாவில் பங்கேற்றவர் அதற்குப் பிறகு எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறித்து களமிறங்கியிருக்கும் இவர், மக்களை எப்படி சந்திப்பார். செய்தியாளர்களை எப்படி எதிர்கொள்வார் என்ற கேள்விகள் எழுந்தன. இவை அனைத்திற்கும் பதில் சொல்லும் விதமாக, இன்று பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள பெரியார் திடலில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

பெரியாருக்கு ‘முதல்’ மரியாதை செய்த விஜய்

இதுவரை மக்கள் இயக்கம், தமிழக வெற்றிக் கழகம் சார்பாக புதுவை என். ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளே தலைவர்களின் சிலைக்கு மரியாதை செலுத்திவந்த நிலையில், முதன்முறையாக ஒரு அரசியல் தலைவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார் விஜய். இதன் மூலம் அரசியலில் எனக்கு முன்னோடியாக இருக்கும் தலைவர் இவர்தான் என்று அனைவருக்கும் எடுத்துக்காட்டியுள்ளார் விஜய். முன்னதாக, பெரியார் பிறந்தநாளை ஒட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட விஜய், பெரியார் காட்டிய சமுத்துவம் சம உரிமை, சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆக, இடதா? வலதா..? அரசியலில் எந்த பக்கம் நிற்க இருக்கிறார் என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாகவே அவரது செயல்பாடுகள் இருக்கின்றன. அப்படித்தான் மக்கள் இயக்க நிர்வாகிகள் முதன்முறையாக அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்ட மரியாதை செலுத்தினர். பெரியார் சிலைக்கு மரியாதை செய்து ஆட்டத்தை துவங்கியுள்ளார் விஜய். மாநில உரிமை, பெண்கல்வி, சமூகநீதி, சமத்துவம் போன்ற கொள்கைகளை தூக்கிப்பிடித்து வரும் விஜய், தனது ஒட்டுமொத்த கொள்கை, கோட்பாடுகள் குறித்து முதல் மாநாட்டில் அறிவிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..!

ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரத்தை மாற்ற வேண்டும். சாதி மத பேதங்கள் வாயிலாக நடக்கும் பிளவுவாத அரசியல் கலாச்சாரத்தை மாற்ற வேண்டும் என்ற பாணியில் கட்சி துவக்க அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் விஜய். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கொள்கையை கட்சியின் அடிநாதமாகவே வைத்து பேசி வருகிறார். இந்த செயல்பாடுகள் அனைத்தும் விஜய்யின் இடதுசாரி அரசியலை காட்டுவதாக ஒருபக்கம் பேசுபொருளாக இருக்கின்றன. அதேசமயத்தில், விநாயகர் சதுர்த்திக்கு அவர் வாழ்த்து கூறாததை பாஜக உள்ளிட்ட வலதுசாரி கட்சிகள் எதிர்க்கவும் செய்துள்ளன.

இந்த பார்வை ஒருபக்கம் என்றால், பெரும்பான்மை மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் விதமாக, விஜய் குங்கும பொட்டு வைத்திருக்கும் ஃபோட்டோதான் லெட்டர் பேடில் இடம்பெற்றுள்ளது. ஆகையால், அனைத்து தரப்பு மக்களுக்கான அரசியலைத்தான் விஜய் முன்னெடுக்கிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இவை அனைத்தையும்தாண்டி, விஜய்யின் நிலைப்பாடு என்ன என்பது கட்சியின் முதல் மாநாட்டிற்குப் பிறகுதான் தெரியவரும்.