தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்  ட்விட்டர்
தமிழ்நாடு

தவெக கொடி அறிமுக நாள் | “நாடெங்கும் நமது கொடி பறக்கும்; தமிழ்நாடு இனி சிறக்கும்” - விஜய் அறிவிப்பு!

நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்; தமிழ்நாடு சிறக்கும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

PT WEB

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்தே, தமிழக அரசியல் களம் பரபரப்பாகவே இருக்கிறது. இருப்பினும் கட்சி தொடங்கப்பட்டு 6 மாதங்கள் ஆனபோதும், இன்னும் கட்சி கொடியோ கட்சியின் நிலைப்பாடுகளோ தெளிவாக சொல்லப்படவில்லை.

இது தவெக மீதான விமர்சனங்களை அதிகப்படுத்தி வந்தது. அதற்கு முடிவு கட்டும் வகையில், அடுத்த மாதம் கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் தவெக தலைவர் விஜய். அதேவேளையில், கட்சியின் கொடியை வரும் 22ஆம் தேதி (நாளை) அவர் பனையூர் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அறிமுகம் செய்யப்போவதாக தகவல் வெளியானது.

த.வெ.க. தலைவர் விஜய்

கட்சியின் கொடி அறிமுக நிகழ்ச்சியிலேயே கொடிப்பாடலையும் வெளியிடப்போவதாகவும் செய்திகள் வந்தன. இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார் என்றும் பாடலாசிரியர் விவேக் பாடலை எழுதியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

கொடி பறக்கும்; தமிழ்நாடு சிறக்கும்

இந்நிலையில் தவெக கொடி அறிமுகம் நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் அணி தலைவர்கள் என மொத்தமாக 250 நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், கொடியை அறிமுகம் செய்ய உள்ள விஜய் 5 நிமிடம் உரையாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அப்போதே மாநாடு தேதியை அவர் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

ActorVijay TVKFlag

இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22, நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்” என தெரிவித்துள்ளார்.