எம்ஜிஆர், அண்ணா, விஜயகாந்த், விஜய் pt web
தமிழ்நாடு

தவெகவின் திசை | எம்ஜிஆர், அண்ணா.. தற்போது விஜயகாந்த்.. விஜய்யின் திட்டம்என்ன? கட்சியினர் சொல்வதென்ன?

அண்ணாவின் மீது அபிமானம் கொண்டு தலைமுறை, தலைமுறையாக திமுகவுக்கு வாக்களிப்பவர்கள் இருப்பார்கள். அவர்களில், தற்போதைய திமுக தலைமையின், ஆட்சியின் மீது அதிருப்தியில் இருப்பவர்கள் எங்களின் மீது கவனத்தைத் திருப்ப வாய்ப்பிருக்கிறது.

இரா.செந்தில் கரிகாலன்

விக்கிரவாண்டியில் முதல் மாநாடு

விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கொடிப் பாடலில் அண்ணா, எம்.ஜி.ஆர் விஷுவல் இடம் பெற்றதும், இன்று வெளியான ‘கோட்’ திரைப்படத்தில் விஜயகாந்த் காட்சிகள் இடம்பெற்றதும் வெறுமனே அவர்களின் மீதான மரியாதையால் மட்டுமல்ல, அதற்குப் பின்னாள் பல அரசியல் வியூகங்கள் இருக்கின்றன என்கிறார்கள் கட்சி வட்டாரத்தில்.., அது என்ன வியூகம் விரிவாகப் பார்ப்போம்..

தவெக தலைவர் விஜய்

தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய், கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து, ஆகஸ்ட் 22-ம் தேதி கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். கொடியின் விளக்கம், கட்சியின் கொள்கைகள், நிர்வாகிகள் யார் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் மாநாட்டில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது. மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் 23-ம் தேதி நடைபெறவிருக்கிறது. மாநாட்டு அனுமதிக்கான வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது.

கோட் திரைப்படத்தில் விஜயகாந்த்

முதல் மாநாட்டுக்கு, பல்வேறு மாநில முதல்வர்கள் தொடங்கி பல முக்கிய வி.ஐ.பிக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட இருக்கிறது. தவிர திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முன்னாள், எம்.பி, எம்.எல்,ஏக்கள் மாநாட்டிலேயே கட்சியில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கூடுதலாக, தற்போது மாநாட்டுக்கு காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை அழைக்க விஜய் விரும்புவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்

கட்சிக்கொடி அறிமுகப்படுத்தப்பட்ட நாளன்று, கொடிப் பாடலும் அறிமுகப்படுத்தப்பட்டது. “தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பிறக்குது.. மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது” என்ற வரிகளுடன் அந்தப் பாடல் தொடங்குகிறது. அதில், விஜய்யுடன், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் விஷுவலும் இடம்பெற்றிருந்தது. இன்று வெளியான கோட் திரைப்படத்தில், AI முறையில் விஜயகாந்தின் முகமும் குரலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. விஜய்யின் முகம் விஜயகாந்தின் முகமாக மாறும் வகையில் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது..,

கட்சி வட்டாரத்தில் சொல்வதென்ன?

“அண்ணா, எம்.ஜி.ஆர், கேப்டன் விஜயகாந்தின் மீது தளபதிக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. அதில் துளியளவும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அவர்களை இதுபோன்று பயன்படுத்துவது தேர்தலில் மிகப்பெரிய அளவு கைகொடுக்கும் என்கிற எதிர்பார்ப்பும் இல்லாமல் இல்லை” என்கிறார்கள் கட்சி வட்டாரத்தில்.

“தமிழ்நாட்டில் தளபதிக்கு மிகப்பெரிய ரசிகப் பட்டாளம் இருக்கிறது. விஜய் மக்கள் இயக்கம் தமிழ்நாடு முழுவதும் நல்ல கட்டமைப்புடன் செயல்பட்டு வந்தது. அந்த நம்பிக்கையில்தான் கட்சியை ஆரம்பித்தார் தளபதி. ரசிகர்கள், மன்ற நிர்வாகிகளின் வாக்குகள் நிச்சயமாக எங்களுக்குக் கிடைக்கும். தவிர, திமுக, அதிமுக மீதான அதிருப்தி வாக்காளர்கள் எப்போதும் இருப்பார்கள். அவர்களின் வாக்குகள் கணிசமாக எங்களுக்கு வரும் வாய்ப்பும் இருக்கிறது. ஆனால், ஆட்சியமைக்க, கௌரவமான வாக்குகளைப் பெற அது மட்டுமே போதாது. அந்தவகையில், அண்ணாவின் மீது அபிமானம் கொண்டு தலைமுறை, தலைமுறையாக திமுகவுக்கு வாக்களிப்பவர்கள் இருப்பார்கள். அவர்களில், தற்போதைய திமுக தலைமையின், ஆட்சியின் மீது அதிருப்தியில் இருப்பவர்கள் எங்களின் மீது கவனத்தைத் திருப்ப வாய்ப்பிருக்கிறது. ஆனால், இது பெரியளவில் கைகொடுக்குமா என்பது கேள்விக்குறிதான்.

ஆனால், எம்.ஜி.ஆருக்காக, அதிமுகவுக்கு, இரட்டை இலைக்கு வாக்களிக்கும் மக்கள் இன்றளவும் பல லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களில் பலர், அதிமுக இன்று பல்வேறு குழுக்களாக பிளவுற்றிருப்பதால் குழப்பத்திலும் ஏமாற்றத்திலும் இருக்கிறார்கள். கொடிப்பாடலில் மட்டுமல்ல, மாநாடு, தேர்தல் பிரசாரம் என இனிவரும் காலங்களில் எம்.ஜி.ஆரை விஜய் முன்னிறுத்துவதன் மூலம் அதிமுக வாக்குகளைப் பெற அதிக வாய்ப்பிருக்கிறது. அதேபோல, தேமுதிகவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்திருந்தாலும், இன்றளவும் விஜயகாந்துக்காக தேமுதிகவிற்கு வாக்களிப்பவர்கள் இருக்கிறார்கள். பலர் தேமுதிகவின் கூட்டணிக் குழப்பங்களால் யாருக்கும் வாக்களிக்காமல் ஒதுங்கியிருந்தார்கள். அவர்கள் மீண்டும் விஜயகாந்துக்காக தளபதிக்கு வாக்களிக்கும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.., சமூக வலைதளங்களில் அதற்கான பதிவுகளைப் பார்க்க முடிகிறது. அந்த வகையில் ஒரு கோடி வாக்குகள் அதாவது இருபது சதவிகித வாக்குகள் வரை பெறுவதற்கான சூழல் இப்போதே இருக்கிறது” என்கிறார்கள் கட்சி வட்டாரத்தில்.