செய்தியாளர்: மோகன்
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் இன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகிறார். புதுச்சேரியில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் வரும் அவர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஹெலிபேடில் தரை இறங்குகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வருகிறார்.
அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு, சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் அமைந்துள்ள பாபாஜி கோயிலில் தரிசனம் செய்வதற்காக காரில் புறப்பட்டுச் செல்கிறார்.
இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு வடக்கு மண்டல காவல்துறை ஐஜி கண்ணன் தலைமையில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோயிலுக்குள் வரும் பக்தர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பக்தர்கள் கொண்டு வரும் உடைமைகள் ஸ்கேன் செய்யப்பட்டு மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டு அதில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பிறகு கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். போலீஸ் மோப்பநாய் மூலம் பல்வேறு இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. துணை ஜனாதிபதி வருகையையொட்டி சிதம்பரத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.