வெற்றி துரைசாமி புதிய தலைமுறை
தமிழ்நாடு

தனி விமானத்தில் சென்னை வரும் வெற்றி துரைசாமியின் உடல்

8 நாட்கள் தொடர் போராட்டத்திற்கு பிறகு பாறையின் அடியில் இருந்து மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் இன்று தனி விமானம் மூலமாக சென்னை வந்தடைகிறது.

ஜெனிட்டா ரோஸ்லின்

சுற்றுலாவிற்காக இமாச்சல பிரதேசத்திற்கு சென்ற வெற்றி துரைசாமியின் கார், விபத்தில் சிக்கிய நிலையில் சட்லெட்ஜ் நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடல் தனிவிமானம் மூலமாக இன்று சென்னை வந்தடைகிறது.

முன்னதாக சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் கார் கடந்த 4-ம் தேதி சட்லெட்ஜ் ஆற்றில் கவிழ்ந்தது. இதில் அவருடன் சென்ற நண்பர் கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஓட்டுநர் உயிரிழந்திருந்தார்.

வெற்றி துரைசாமி விபத்து

வெற்றி துரைசாமியை குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்கப்பெறாமலேயே இருந்தது. இதையடுத்து அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. விபத்து நிகழ்ந்து 8 நாட்கள் ஆன நிலையில் நேற்று (12.2.2024) சம்பவ இடத்தில் இருந்து சுமார் 2 - 6 கி.மீ தொலைவில் வெற்றி துரைசாமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து வெற்றி துரைசாமியின் உடல் சிம்லா இந்திரா காந்தி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்பிறகு சண்டிகரில் இருந்து தனி விமானம் மூலம் காலை 11.15 க்கு வெற்றி துரைசாமியின் உடல் சென்னை வந்தடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இவரது உடல் இன்று மாலை கண்ணம்மாபேட்டையில் உள்ள மயான பூமியில் தகனம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரின் மறைவுக்கு மு.க.ஸ்டாலின், ஒபிஎஸ், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.