சென்னை உள்ளிட்ட 8 வட மாவட்டங்களில் இன்று(10.11.2021) அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை காரைக்கால் - ஸ்ரீஹரிக்கோட்டா இடையே கடலூர் அருகே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது வலுப்பெற்று அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் இன்று (10.11.2021) அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், டெல்டா மாவட்டங்கள், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், காரைக்காலில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. இதனால் தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் 2 நாட்களுக்கு அதி கனமழை தொடரும் எனவும் வானிலை ஆய்வுமையம் அறிவித்திருக்கிறது. மேலும் நவம்பர் 12ஆம் தேதிமுதல் தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் என்றும் அறிவித்திருக்கிறது.