தமிழ்நாடு

“கருத்து சுதந்திரத்தை காவு கொடுக்க முடியாது” - சு.வெங்கடேசன் சாடல்

“கருத்து சுதந்திரத்தை காவு கொடுக்க முடியாது” - சு.வெங்கடேசன் சாடல்

webteam

அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்கக்கூடாது என்றால், சமையல் குறிப்பு புத்தகங்களைக்கூட விற்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்பனை செய்ததாக பத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பல்வேறு தரப்பினரின் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. அதில் ஓர் படைப்பாளியாக தனது எதிர்ப்பை சற்று பலமாக பதிவு செய்திருக்கிறார், சாகித்திய அகாடமி விருது வென்ற எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன்.

‘கீழடி ஈரடி’ என்ற தலைப்பில் உரையாற்றுவதற்காக, சென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் புத்தகக் காட்சியில் சு.வெங்கடேசன் பங்கேற்றார். பேச்சின் தொடக்கத்திலேயே, கீழடி குறித்து உரையாற்றப்போவதில்லை எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்திய அவர், பபாசிக்கு எதிராக பல விமர்சங்களை முன்வைத்தார்.

அப்போது பேசிய அவர், “சமையல் குறிப்பு புத்தகத்தில் வெங்காயம் குறித்து இருக்கிறது. அது மத்திய அரசுக்கு எதிரானது. உப்பு குறித்து இருக்கிறது. அது மாநில அரசுக்கு எதிரானதாக இருக்கும். தலைவர்கள் எழுதிய புத்தகங்களே அரசுக்கு எதிரானவை தான். காந்தி, ‌அம்பேத்கர், அண்ணாவின் புத்தகங்களைக் கூட விற்கமுடியாது. மிக சர்ச்சைக்குரிய கீழடியை கண்காட்சியில் இருந்து நீக்கி விடுவீர்களா?” எனப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது விமர்சனங்கள் தொடர்பாக விளக்கமளித்தார். “பபாசியின் நடவடிக்கை கருத்துரிமைக்கு எதிரானது. கருத்து சுதந்திரத்தை காவு கொடுக்க முடியாது” எனத் தெரிவித்தார். தென் இந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் மேடையிலேயே, அந்த அமைப்பை கண்டித்து பேசிய சு.வெங்கடேசன், அங்கிருந்து வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது.