வேங்கைவயல் pt web
தமிழ்நாடு

வேங்கைவயல் விவகாரம்.. மூன்று பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை.. எப்படி நடக்கும் voice analysis?

PT WEB

செய்தியாளர் ஆனந்தன்

2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது கண்டறியப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர், இதுவரை குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிய முடியாமல் திணறி வருகின்றனர். குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட நீரின் மாதிரியை எடுத்து சந்தேகத்திற்கிடமான 5 சிறுவர்கள் உட்பட 31 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால், இந்த சோதனை தோல்வியில் முடிந்த நிலையில், சம்பவம் நடந்தபோது பகிரப்பட்ட வாட்ஸ் அப் ஆடியோக்கள் மற்றும் செல்போன் உரையாடல்களில் இருந்த குரல் பதிவுகளை சேகரித்து, அது யாருடைய குரல் என்பதை உறுதி செய்வதற்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்த சிபிசிஐடி முடிவு செய்தது.

வேங்கைவயல் நீர்தேக்கத்தொட்டி

அதன்படி, ஒரு காவலர் உட்பட இரண்டு பேருக்கு குரல் பரிசோதனை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து வேங்கைவயலை சேர்ந்த இரண்டு பெண்கள், ஒரு இளைஞர் என மேலும் மூன்று பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்த புதுக்கோட்டை நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனடிப்படையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு குரல் மாதிரி பரிசோதனைக்காக மூன்று பேரும் அழைத்துவரப்பட்டனர். அங்கு 3 பேரிடம் இருந்து தனித்தனியாக குரல் மாதிரி பதிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஆயுதப்படை காவலர் ஒருவருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவரின் செல்போனில் உள்ள எண்களை வைத்து, இந்த மூன்று பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குரல் மாதிரி பரிசோதனை எப்படி நடக்கும்

இந்த பரிசோதனைக்கு, "குரல் பகுப்பாய்வு முறை" (voice analyzed) என்று பெயர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நபரை ஆய்வகத்திற்கு நேரில் வரவழைத்து, சம்பந்தப்பட்ட குற்றச்சம்பவத்தில் அவர் பேசியதாக கூறப்படும் பகுதியை எழுதிக்கொடுத்து பேசச்சொல்லி பதிவு செய்வார்கள். விதவிதமாக பேசச் சொல்லி குரல் மாதிரிகள் எடுக்கப்படும் குரல் மாதிரிகள் எடுக்கப்பட்ட பின் கவால்துறை அளித்த குரல் மாதிரியுடன் ஒப்பிடப்படும். அந்த சோதனையில் குரலின் அதிர்வு அளவு, குரலின் ஏற்ற இறக்கங்கள் கணக்கிடப்படும்.

ஒவ்வொரு குரலுக்கும் ஒரு வித்தியாசம் குறியீடு இருக்கும், அதை தடயவியல் அறிவியலாளர்கள் கண்டறிவார்கள். குறிப்பிட்ட நாட்களுக்குள், சோதனை செய்யப்பட்ட குரல் மாதிரியின் முடிவுகள் சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் நேரடியாக தடயவியல்துறை மூலம் அளிக்கப்படும். அந்த முடிவே காவல்துறையின் ஆதாரமாக கருதப்படும். அதேபோன்று வேங்கைவயல் வழக்கிலும் குற்றவாளிகளை கண்டறிய இந்த குரல் மாதிரி பரிசோதனை கைகொடுக்குமா என்பது தடயவியல் துறையின் ஆய்வு முடிவில் தெரியவரும்.