பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற வேலூரை சேர்ந்த பயனாளிகளிடம் பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்சிங் மூலம் கலந்துரையாடினார்.
அவாஸ் யோஜனா (AWAS YOJANA) எனப்படும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்களிடம் பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்சிங் மூலம் இன்று கலந்துரையாடினார். தமிழகத்தில் வேலூரை மாவட்டத்தை சேர்ந்த பேகம்பீ காதர்பேக் என்ற பெண்மணியிடம் மோடி பேசினார். மோடி இந்தியிலும், பேகம்பீ காதர்பேக் உருதுமொழியிலும் கலந்துரையாடினர்.
தனக்கென்று வீடு கிடைக்கும் என தான் நினைத்து கூட பார்த்தது இல்லை, ஆனால் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் வீடு கிடைத்திருக்கிறது என கூறிய அந்த பெண், இனி மழை காலங்களை நினைத்து வருந்தத் தேவையில்லை என தெரிவித்தார். மேலும் இந்த திட்டத்தில் வீடு கட்டுவதற்காக தான் ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்கவில்லை என்றும் பிரதமரிடம் கூறினார். முன்னதாக இந்த திட்டம் குறித்து பேசிய பிரதமர், வரும் 2022ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்கை அடைய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.